”வடகிழக்கு மாநிலங்களைப் பிரிப்போம்..” எச்சரித்த வங்கதேச கட்சித் தலைவர்.. பதிலடி கொடுத்த இந்தியா!
"வங்கதேசம் சீர்குலைக்கப்பட்டால், வடகிழக்கு மாநிலங்களைப் பிரித்து தனிமைப்படுத்துவோம்” என அந்நாட்டில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் கட்சியின் (என்சிபி) தலைவர் ஹஸ்னத் அப்துல்லா எச்சரித்ததற்கு அசாம் முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று, வங்கதேசம். அங்கு நோபல் பரிசுபெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசில் மாணவர் தலைவர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். இதற்கிடையே, அடுத்த ஆண்டு அந்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், ”வங்கதேசம் சீர்குலைக்கப்பட்டால், வடகிழக்கு மாநிலங்களைப் பிரித்து தனிமைப்படுத்துவோம்” என அந்நாட்டில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் கட்சியின் (என்சிபி) தலைவர் ஹஸ்னத் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து டாக்காவின் மத்திய ஷாஹீத் மினாரில் உரையாற்றிய அவர், “வங்கதேசத்தின் இறையாண்மை, ஆற்றல், வாக்குரிமைகள் மற்றும் மனித உரிமைகளை மதிக்காத சக்திகளுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தால், வங்கதேசம் பதிலடி கொடுக்கும். வங்கதேசம் சீர்குலைக்கப்பட்டால், வடகிழக்கு மாநிலங்களைப் (ஏழு சகோதரிகள்) பிரித்து தனிமைப்படுத்துவோம். வடகிழக்கு பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்போம். சுதந்திரம் அடைந்து 54 ஆண்டுகளுக்குப் பிறகும், நாட்டின் மீது கட்டுப்பாட்டை செலுத்த முயலும் கழுகுகளின் முயற்சிகளை வங்கதேசம் தொடர்ந்து எதிர்கொள்கிறது” என அவர் தெரிவித்தார். ஏழு சகோதரிகள் என்ப்படுவது அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களாகும். இதில் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகியவை பங்களாதேஷின் நில எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன.
ஹஸ்னத் அப்துல்லாவின் கருத்துகளுக்கு பதிலளித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை வங்கதேசத்துடன் இணைப்பது பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது. இதுபோன்ற அறிக்கைகளுக்கு இந்தியா அமைதியாக இருக்காது” என அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த காலங்களில், வடகிழக்கில் செயல்படும் போராளி மற்றும் பிரிவினைவாத குழுக்கள் அதன் எல்லைப் பகுதியை பாதுகாப்பான புகலிடமாகவும், போக்குவரத்துப் பாதையாகவும், தளவாடத் தளமாகவும் பயன்படுத்துவதாகவும் இந்தக் குழுக்கள் வங்கதேச எல்லைக்குள் சென்று தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இந்தியா ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருந்தது. இந்தச் சூழலில், 2009ஆம் ஆண்டு அரியணை ஏறிய ஷேக் ஹசீனாவிற்குப் பிறகு இருதரப்பு பாதுகாப்பு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தை கவிழ்க்க முக்கியப் பங்கு வகித்ததில், எதிர்ப்பு மாணவர் இயக்கத்திற்கும் தேசிய குடிமக்கள் குழுவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. இந்த இரண்டிலிருந்தும்தான் தேசிய குடிமக்கள் கட்சி உருவானது. மாணவர் இயக்கத்திலிருந்து பிறந்த ஒரு கட்சியாக இது உருவானாலும், அரசியல் வம்சாவளி இல்லாததாக இக்கட்சி வலு சேர்க்கிறது. இந்தக் கட்சி அடுத்த பொதுத் தேர்தலில் பழைய கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிட இருக்கிறது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி முன்னிலையில் உள்ளது.

