“ஹலோ, அங்கிள் அமரீந்தர்” தனக்குப் பிடித்த பாஜக தலைவர் இவர்தான்.. ராகுல்காந்தி அளித்த பதில்!
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி, தனக்கு பிடித்த பாஜக தலைவர் யார் என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் ராகுல்காந்தி காந்தி நடத்திய ‘Ask Me Anything’ என்ற கேள்வி பதில் அமர்வில், அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், “உங்களுக்கு பிடித்த பாஜக அரசியல்வாதி யார்?” என ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தசூழலில் தான், அந்த கேள்விக்குப் பதிலளித்துள்ள ராகுல்காந்தி, “கேப்டன் அம்ரீந்தர் சிங்” (Amarinder Singh) தனக்குப் பிடித்தமான அரசியல்வாதி எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், அவருடன் தனக்கு நல்ல புரிதல் இருப்பதாகவும், அவர் மிகவும் கூல் எனவும் தெரிவித்திருப்பதுடன் கேப்டன் அமரீந்தர் சிங்கின் ராணுவ வரலாறு குறித்த அறிவையும் ராகுல் காந்தி பாராட்டியிருக்கிறார். இறுதியில், “ஹலோ, அங்கிள் அமரீந்தர்” என்று அன்புடன் குறிப்பிட்டுப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவார். இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ள அவர், ராணுவ வரலாற்றிலும் ஆர்வம் கொண்டவர். காங்கிரஸ் கட்சியில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி அக்கட்சியில் இருந்து விலகிய பின்னர், 2021ஆம் ஆண்டு ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற கட்சியை அமரீந்தர் சிங் தொடங்கினார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். பின்னர், அதே ஆண்டு பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் இணைந்தது. இந்தசூழலில் தான், தற்போது அமரீந்தர் சிங் பாஜகவின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
நீட் முறைகேடு, கரப்பான் ஜனதா கட்சியினர் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளும் பாஜக அரசை ராகுல் காந்தி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தனக்கு பிடித்த பாஜக அரசியல்வாதியாக அமரீந்தர் சிங்கை அவர் குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

