அமெரிக்க தேர்தலில் திருப்பம்.. டிரம்பு-க்கு மிகப்பெரிய அதிர்ச்சி!
கருத்துக் கணிப்புகள் மூலம், டிரம்ப் நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது. இடைக்கால தேர்தலில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வெற்றி 80% வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அமெரிக்க அரசியல் அமைப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர் - கார்த்திகேயன்
இந்தியாவில் உள்ள தேர்தல் வழிமுறைகளுக்கு முற்றிலும் மாறாக தான், அமெரிக்காவில் நடைமுறைகள் உள்ளன. அப்படி வித்தியாசமாக உள்ள ஒரு நடைமுறை தான், இடைக்கால தேர்தல். அதிபரின் பதவிக்காலம் பாதி முடிந்த பிறகு நடக்கும் தேர்தல் என்பதால், இதனை இவ்வாறு அழைக்கிறார்கள். இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால், டிரம்பின் அதிபர் பதவி பறிக்கப்படாது. ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் கட்சிக்கான அதிகாரம் குறைந்துவிடும். இதனால், புதிய சட்டங்கள், மசோதாக்களை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்படும். தற்போதைய ஆட்சியின் மீது மக்கள் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை, இந்த தேர்தலின் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்.
இவ்வளவு முக்கியமான இந்த தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில், டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தி ஹாரிஸ் Poll என்ற ஆய்வு நிறுவனம், ஆன்லைன் வாயிலாக கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இதில், தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் எந்த விவகாரம் முக்கிய வங்கு வகிக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதில், விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு 36 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். மேலும், அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று 12 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். பிற நாட்டு மக்களின் குடியேற்றம், அதிக வரி விதிப்பு, வீட்டு வாடகை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகிய பிரச்சனைகள் அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளன. இதே கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்வியில், அதிகாரிகள் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள் என்று 76 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
ஈரான் போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, வெள்ளை மாளிகையின் கிழக்கு பகுதியை இடித்துவிட்டு 400 பில்லியன் டாலரில் பிரம்மாண்ட அரங்கு அமைத்தது, 4 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்ததற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதது போன்ற காரணங்களால், டிரம்ப் நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இந்த இடைக்கால தேர்தலில், எதிர்கட்சியான ஜனநாயக கட்சி வெற்றி பெறுவதற்கு, 80 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தேர்தலில் டிரம்ப் குடியரசு கட்சி தோல்வி அடைந்தால், அதிகார மையம் முற்றிலும் தலைகீழாக மாறும் என்றும், ஏற்கனவே டிரம்ப் மூலம் வரி சலுகைகள் பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன என்றும், கூறப்படுகிறது. எனவே, இந்த தேர்தல் உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது.

