அமெரிக்காவை அலறவைத்த போலி வேட்பாளர் : நம்ம ஊருல இது எல்லாம் சாதாரணம்.. FBI விசாரணையில் பகீர்!
அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி நாடாளுமன்ற மற்றும் மாகாணங்களுக்கான இடைக்கால தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் அலாஸ்கா செனட் தேர்தலில், ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் டேன் சலிவன் (Dan Sullivan) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் மேரி பல்டோலா (Mary Peltola) என்பவர் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், இந்த அலாஸ்கா செனட் தேர்தலில் சுயேச்சையாக 'டேனியல் ஜே. சலிவன்' (Daniel J. Sullivan Jr.) என்றவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் காரணமாக யார் உண்மையான டேன் சலிவன் என்று குழப்பமடைந்ததாக விமர்சனம் எழுந்தது.
அதைத் தொடர்ந்து பிரபல தி நியூயார்க் டைம்ஸ் (The New York Times) செய்தி நிறுவனம் இது குறித்து புலனாய்வு விசாரணை செய்து, இதன் பின்னணியில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி இருப்பதாக செய்தி வெளியிட்டது. மேரி பல்டோலாவின் பிரச்சாரக் குழு மற்றும் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் உத்தியாளர்கள், குடியரசுக் கட்சி செனட்டர் டேன் சலிவனின் (Dan S. Sullivan) வாக்குகளைப் பிரிப்பதற்காக அதே பெயர் கொண்ட மற்றொரு நபரைக் களமிறக்கத் திட்டம் தீட்டி ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான டேனியல் ஜே. சலிவன் என்பவரை வேட்பாளராக களமிறக்கியதாக அந்த புலனாய்வு செய்தியில் கூறியிருந்தது.
இது அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என குடியரசுக் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி FBI அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சுயேச்சை வேட்பாளரான டேனியல் ஜே. சலிவன் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் எந்த பரப்புரையிலும் ஈடுபடவில்லை என்பதும் இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டது.
இதனிடையே, இந்த விவகாரம் வெளிவந்ததும் சுயேச்சை வேட்பாளரான டேனியல் ஜே. சலிவன் அவரது சொந்த ஊரான பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து தலைமறைவாகியதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என இன்னும் தெரியவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமக்கும் சுயேச்சையான 'டேன் சலிவன்' வேட்புமனுத் தாக்கலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும், தனது பிரச்சாரத்திற்கு எதிராகப் பரப்பப்படும் தவறான பிரச்சாரம் இது யாரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான மேரி பல்டோலா கூறியுள்ளார்.
இந்தியாவில் இப்படி ஒரு வேட்பாளரை வீழ்த்த அதே வேட்பாளர் பெயரில் வேறு சுயேச்சை வேட்பாளரை போட்டியிட வைப்பது நீண்ட காலமாக தொடரும் நிலையில், அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்து அந்த நாட்டையே பரபரப்பாக்கியுள்ளது.

