\
இந்தியா ஏற்றுமதி
இந்தியா ஏற்றுமதிai

அமெரிக்காவின் வரி அஸ்திரம்.. இந்தியாவுக்கு காத்திருக்கும் இரட்டை சவால்.. தவிக்கும் தொழில்துறை!

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்க ட்ரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நகர்வால் இந்தியத் தொழிற்துறை எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன என்பதை PT FOCUS தொகுப்பில் பார்க்கலாம்.
Published on: 
Summary

அமெரிக்காவின் 25% இறக்குமதி வரி முன்மொழிவு இந்திய தொழில்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. ஜவுளி, ஆபரணங்கள், கடல் உணவுகள் உள்ளிட்ட ஏற்றுமதித் துறைகள் பாதிக்கப்படும் நிலையில், மாற்றுச் சந்தைகளை விரிவுபடுத்தும் முயற்சியில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.

2026 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், அமெரிக்காவுக்கு 87 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பிலான பொருட்களை இந்திய தொழிற்துறையினர் ஏற்றுமதி செய்துள்ளனர். இந்தச் சூழலில், இந்தியப் பொருட்களுக்கு அதிகபட்சம் 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா முன்மொழிந்திருப்பது இந்தியத் தொழில்துறையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப், மோடி
ட்ரம்ப், மோடிai

அதிகப்படியான தொழில்துறை உற்பத்தித் திறன், சந்தை அணுகலில் உள்ள தடைகள், தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் ஆகியவை அமெரிக்க நிறுவனங்களின் வளர்ச்சியைப் பாதிப்பதாகக் குற்றம்சாட்டும் ட்ரம்ப் அரசு, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு எதிராகப் புதிய வரி நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது. இதன் தாக்கம், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், கடல் உணவுகள், வேதிப்பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதித் துறைகளில் நெருக்கடியாக எதிரொலிக்கும் எனத் தொழில்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவுடன் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டால், இறக்குமதி வரியை 17 சதவீதமாகக் குறைக்கத் தயார் என அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இதனால், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்தியாவுக்கு முன்னால் இருப்பது இரட்டைச் சவால். ஒருபுறம், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் தொழில்துறை நலன்களைப் பாதுகாக்க வேண்டும்.

இந்தியப் பங்குச்சந்தை
இந்தியப் பங்குச்சந்தைfile photo

மறுபுறம், அமெரிக்கச் சந்தையை மட்டுமே சார்ந்திருக்காமல் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட மாற்றுச் சந்தைகளிலும் ஏற்றுமதியை விரிவுபடுத்த வேண்டும். அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலை எதிர்கொண்டு, இந்தியாவின் ஏற்றுமதியையும் உள்நாட்டுத் தொழில்துறையையும் மத்திய அரசு எப்படிப் பாதுகாக்கப் போகிறது, வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது, அமெரிக்காவின் நெருக்கடிக்கு இந்தியாவின் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தொழில்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தியா ஏற்றுமதி
கடும் வீழ்ச்சியில் அமெரிக்க பங்குச்சந்தை: AI-யால் ஸ்தம்பிக்கும் உலகப் பொருளாதாரம்!