’சாவுக்குப் பயப்படல..’ - துணை விமானியின் பகீர் வாக்குமூலம்.. விசாரணையில் புது தகவல்கள்!
இந்திய கேப்டன் ஸ்மித் மச்சரைத் தாக்கிய ஃப்ளைதுபாய் துணை விமானி, விமானத்தை மோதச் செய்ய விரும்பியதாகவும், மரணத்திற்கு அஞ்சவில்லை என்றும் அவர் கூறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தீவிரவாத இணையதளங்களைப் பார்ப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்தை அதிகாரிகள் அறிந்த பிறகு, ஓமன் ஏர் நிறுவனம் அவரை விமானத்தில் பயணிக்கத் தடை விதித்ததாகக் கூறப்படுகிறது.
துபாயிலிருந்து டெல் அவிவ் (இஸ்ரேல்) சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில், இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி கத்தியால் குத்தி, விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்ற சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடுமையான காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் மன உறுதியுடன் போராடி, காக்பிட் (Cockpit) கதவைத் திறந்து, பயணிககளின் உதவியோடு தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து 170-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார். இதையடுத்து, உலகத் தலைவர்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
அதேவேளையில் ஓமனின் துணை விமானி பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. கைது செய்யப்பட்ட அந்த ஓமன் துணை விமானி தற்போது சவூதி அரேபிய பாதுகாப்பு அமைப்புகளின் விசாரணை வளையத்தில் உள்ளார். அதன்படி, கேப்டன் ஸ்மித் மச்சரைத் தாக்கிய ஃப்ளைதுபாய் துணை விமானி, விமானத்தை மோதச் செய்ய விரும்பியதாகவும், மரணத்திற்கு அஞ்சவில்லை என்றும் அவர் கூறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
துணை விமானியான ஹமாம் அல்-ஹம்மாமி ஓமனைச் சேர்ந்தவர் என்று அறியப்படுகிறார். மேலும் அவர் ஓமனைச் சேர்ந்த தந்தைக்கும் சிரியாவைச் சேர்ந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தவர் என்றும் பல ஆண்டுகளாக துபாயில் வசித்து வந்ததாகவும், சிரியாவில் நடைபெற்ற நீண்ட உள்நாட்டுப் போரின்போதும் அவர் அங்கு சிறிது காலம் வசித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ஓமன் ஏர் நிறுவனத்தால் விமானம் ஓட்டத் தடை விதிக்கப்பட்ட பிறகு, ஹம்மாமி வேறு இடங்களில் வாய்ப்புகளைத் தேடியதாகவும், அவர் 2025-இல் ராயல் ஏர் மரோக் நிறுவனத்தில் சேர முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தீவிரவாத இணையதளங்களைப் பார்ப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்தை அதிகாரிகள் அறிந்த பிறகு, ஓமன் ஏர் நிறுவனம் அவரை விமானத்தில் பயணிக்கத் தடை விதித்ததாகக் கூறப்படுகிறது.
இறுதியில், அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் நடப்பு ஆண்டு பிப்ரவரியில் பணியமர்த்தப்பட்டார். மறுபுறம், விமானிகளைப் பணியமர்த்தும்போது ஐக்கிய அரபு அமீரகம் பொதுவாக விரிவான பாதுகாப்புச் சோதனைகளை நடத்தும் நிலையில், இதில் ஓட்டை விழுந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் இவ்விவகாரம் குறித்து சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாய் விசாரித்து வருகின்றன.

