AI ஆதிக்கம்.. Google, Microsoft, Canva வரிசையில் Meta.. வேலையை விட்டுச் செல்ல கோடிகள்!
AI வளர்ச்சியால் வேலைகளை மையமாக்கும் முயற்சியில் Meta, Google, Microsoft போன்ற நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டங்களை அறிவித்துள்ளன. மெட்டா நிறுவனம் பிரான்சில் தனது ஊழியர்களுக்கு இந்த திட்டத்தை வழங்கி, நவம்பர் 5-ம் தேதியை கடைசி நாளாக அறிவித்துள்ளது.
செய்தியாளர் - M. மீரா
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிக முதலீடு செய்து வருகிறது. அதேசமயம் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளன. ஏற்கெனவே கூகுள் நிறுவனம் பிரான்ஸ் உள்ளிட்ட 5 நாடுகளில் தனது ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை வழங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தகுதியுள்ள 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரபல டிசைன் தளமான canva நிறுவனம், உலகளவில் இருக்கும் அவர்களின் ஊழியர்களின் எண்ணிக்கையில் 22% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்தியா உட்பட 37 நாடுகளில் 5,700 ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். இதில் 1,271 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. .
அந்த வரிசையில், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான Metaவும், தனது ஊழியர்களுக்கு தாராளமான பணப்பலன்களுடன் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பணியாற்றும் மெட்டா ஊழியர்களுக்கு இந்தத் திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக 'லா லெட்ரே' (La Lettre) என்ற பிரெஞ்சு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நவம்பர் 5-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்படி, நிறுவனத்தை விட்டு வெளியேற விரும்பும் ஊழியர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும் 2.15 மடங்கு மாதச் சம்பளம் வழங்க மெட்டா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர, 10 மாதங்களுக்கு 80 சதவீத மொத்தச் சம்பளத்துடன் வேறு வேலை தேடுவதற்கான விடுமுறையும் வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
மேலும், புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கும், வேறு துறைகளில் பயிற்சி பெற விரும்புவோருக்கும் மெட்டா உதவிகளை வழங்குவது குறித்துப் பரிசீலித்து வருகிறது.
மெட்டா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் உலகளவில் தனது ஊழியர்களில் 10 சதவீதம் பேரை, அதாவது சுமார் 8,000 பேரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டது. மேலும், 7,000 ஊழியர்களை AI தொடர்பான பணிகளுக்கு மாற்றவும் முடிவு செய்திருந்தது.
முன்பு பெரிய குழுவினர் செய்த வேலைகளை AI தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது ஒருவரால் செய்ய முடிகிறது என்று மெட்டா தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது மெட்டா நிறுவனம்.

