AI புரட்சி.. ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு! Microsoft இன் அடுத்த அதிர்ச்சி!
செய்தியாளர் : M. மீரா
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது ஊழியர்களில் ஒரு பகுதியினருக்கு இந்தத் திட்டத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவுத் துறையில் தனது முதலீடுகளை அதிகரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா கனடா இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள குறிப்பிட்ட குழுக்களை சேர்ந்த ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். துணைத் தலைவர் (Vice President) பதவியில் இருப்பவர்கள் மற்றும் அதற்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தாது. தரவு மையங்கள் (Data Centres), விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் (marketing) உள்ளிட்ட சில பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இந்தத் திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவில் பணியாற்றும் தனது ஊழியர்களில் சுமார் 7 சதவீதத்தினருக்கு முன்கூட்டியே ஓய்வு பெறும் வாய்ப்பை நிறுவனம் வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகின.
அந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் விருப்ப ஓய்வைத் தேர்வு செய்ததாக CNBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் 2,28,000 ஊழியர்கள் பணியாற்றினர். இந்த எண்ணிக்கை கடந்த ஜூன் மாத இறுதியில் 2,23,000 ஆகக் குறைந்தது.
தற்போதைய விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கு நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 27 சதவீதம் பேர் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருப்ப ஓய்வுத் திட்டம் தொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் ஏமி கோல்மேன், நிறுவனத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஊழியர்கள் தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க அதிக வாய்ப்புகளை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உலகளாவிய போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் AI கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது. இதற்கிடையே, செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

