\
Why Is India’s First Bullet Train Delayed Until 2027?
கோப்புபடம்ANI

புல்லட் ரயில் திட்டம் தாமதத்துக்குக் காரணம் என்ன? சவால்களைக் கடந்து தீவிரமடையும் பணிகள்!!

இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டமான, மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் 2027க்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. 2017இல் தொடங்கிய இத்திட்டம் இத்தனை தாமதமானதற்கான காரணங்களை பார்க்கலாம்.
Published on: 

இந்தியா மற்றும் ஜப்பானின் கூட்டு முயற்சியில், இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம் செப்டம்பர் 2017இல் தொடங்கப்பட்டது. ஜப்பானின் புகழ்பெற்ற 'ஷின்கான்சென்'தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மணிக்கு 300 கிலோ மீட்டர் முதல் 350 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தியா மற்றும் ஜப்பானிய அதிகாரிகளிடையே தொடக்க காலத்தில் வடிவமைப்பு, வரைபடங்கள், தரக் கட்டுப்பாடு மற்றும் கட்டுமானத் திட்டங்கள் தொடர்பான புரிதல்களில் சில இடைவெளிகள் இருந்தன.

இந்தியா - ஜப்பான்
இந்தியா - ஜப்பான்News on air

இரு நாடுகளும் இணைந்து இதுபோன்ற ஒரு பெரிய அளவிலான சிக்கலான திட்டத்தைச் செயல்படுத்துவது இதுவே முதல்முறை என்பதால், ஆரம்பகால எதிர்பார்ப்புகளுக்கும் எதார்த்தத்துக்கும் இடையில் மாறுபாடுகள் இருந்தன. பின்னர் இரு தரப்பினரின் வணிகச் சூழல், வேலை செய்யும் முறை மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறைகளில் சிறு வேறுபாடுகள் இருந்தன. இதனால் ஒப்புதல்களை பெறுவதிலும் திட்டத்தை முன்னெடுப்பதிலும் தொடக்க காலகட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலம் வாங்குவதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் பெருந்தொற்றுக் காலம் போன்ற காரணங்களால் கட்டுமானப் பணிகள் திட்டமிட்ட காலத்துக்குள் தொடங்க முடியாமல் தள்ளிப்போயின. ஆரம்ப காலச் சிக்கல்கள் தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டன. நதிகளைக் கடக்கும் பாலங்கள், சுரங்கப் பணிகள், மற்றும் மஹாராஷ்டிரா பகுதியில் முதல் எஃகு பாலம் அமைக்கும் பணிகள் என கட்டுமானங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. இத்திட்டம் முதலில் 2022ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சூரத் - பிலிமோரா இடையேயான முதல் பகுதி 2027க்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான வழித்தடம் விரைவில் முடிக்கப்படும் என கூறப்படுகிறது.

Why Is India’s First Bullet Train Delayed Until 2027?
140 கி.மீ வேகத்தில் பலத்த காற்று! 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட்!அதி தீவிரமாக மாறும் அர்னாப்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com