தோல்வியடைந்த AI.. மீண்டும் Engineerகளைப் பணிக்கு அழைத்த Ford!
அமெரிக்க வாகன உற்பத்தியாளரான ஃபோர்டு, தரப் பரிசோதனையில் AI-ஐ மட்டும் நம்பியதால் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமல், நூற்றுக்கணக்கான மூத்த இன்ஜினீயர்களை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது. ‘கிரே பேர்டு’ நிபுணர்கள் கார்கள் தொழிற்சாலையை விட்டு வெளியேறும் முன்பே குறைபாடுகளைக் கண்டறிந்து, தங்கள் அனுபவத் தரவுகளை AI-க்கு ஊட்டமாக வழங்கி, தரத்தை உயர்த்துகின்றனர்.
செய்தியாளர் ; M. மீரா
செலவுகளைக் குறைக்கவும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் பிரபல அமெரிக்க வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு தரப் பரிசோதனைக்காக, சில பகுதிகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது.
இதன் காரணமாக தற்போது ஒரு முக்கியப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மனிதப் பொறியியல் அனுபவம் இல்லாமல், வெறும் AI மற்றும் தானியங்கி அமைப்புகளை மட்டுமே நம்பியதால் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்று இந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் காரணமாக, தங்களது ஏஐ கருவிகளுக்குச் சரியான பயிற்சி அளிக்கவும், இளம் ஊழியர்களுக்கு வழிகாட்டவும் நூற்றுக்கணக்கான தங்களது பழைய மூத்த இன்ஜினீயர்களை ஃபோர்டு நிறுவனம் மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்தி வெளியிட்டுள்ளது.
”இந்த AI தொழில்நுட்பத்தை ஃபோர்டு நிறுவனத்தில் பயன்படுத்த ஆரம்பித்த காலங்களில் செயற்கை நுண்ணறிவு பல உயர் பதவியில் உள்ளவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும். 900 AI கேமராக்களை நாங்கள் பொருத்தி இருக்கிறோம். அவை ஆலைகளில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து எங்கள் வேலையை எளிதாக்கும்” என்றும் ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் ஜிம் ஃபார்லி கூறியிருந்தார்,
”ஆனால், தற்போது AI எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வேலை செய்யவில்லை. வெறும் ஏஐ தொழில்நுட்பத்தையும், வடிவமைப்புத் தேவைகளையும் மட்டுமே வைத்துக்கொண்டு தரமான தயாரிப்பு கிடைத்துவிடும் என்று தாங்கள் தவறாகக் கணக்கிட்டுவிட்டோம்” எனத் தெரிவித்துள்ளார். ” AI ஓர் அற்புதமான கருவி, ஆனால் அதற்குப் பயிற்சி அளிக்க நீங்கள் பயன்படுத்தும் தகவல்களைப் பொறுத்தே அதன் தரம் அமையும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தியில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 350 க்கும் மேற்பட்ட அனுபவமிக்க மூத்த இன்ஜினீயர்களை ஃபோர்டு நிறுவனம் மீண்டும் பணிக்குக் கொண்டுவந்துள்ளது. ஃபோர்டு நிறுவனத்திற்குள் 'கிரே பேர்டு' (Gray beard) என்று அழைக்கப்படும் இந்த மூத்த நிபுணர்கள், தற்போது தொழிற்சாலையைவிட்டு வெளியேறும் முன்பே அதன் தரக் குறைபாடுகளைக் கண்டறியும் முக்கியப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி, ”இந்த மூத்த இன்ஜினீயர்களே தங்களது நிறுவனத் திருப்பத்தின் மையப்புள்ளியாக விளங்குவதாகவும் பிரச்னை உருவாவதற்கு முன்பே அதைத் தடுக்கும் உத்தியை அவர்கள் மேற்கொள்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் .
ஃபோர்டு நிறுவனம் AI தொழில்நுட்பத்தை முழுமையாகக் கைவிடாமல் இந்த அனுபவமிக்க இன்ஜினியர்களின் தரவுகளைக் கொண்டு ஏஐ சிஸ்டம்களை மேலும் புத்திசாலியாக மாற்றி வருகிறது. இந்த மனிதவளம் மற்றும் AI கூட்டு முயற்சியால் ஜேடி பவர் தரவரிசையில் ஃபோர்டு நிறுவனம் தற்போது முதலிடத்தைப் பிடித்து சாதித்துள்ளது.

