திவாலாகிறதா Volkswagen? 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்.. 4 உற்பத்தி ஆலைகள் மூடல்.. காரணம் சீனாவா?
ஃபோக்ஸ்வேகன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டை 15% குறைக்கவும் ஜெர்மனியில் உள்ள ஹனோவர், ஸ்விகாவு, எம்டன், நெக்கர்சுல்ம் தொழிற்சாலைகளை மூடவும், மொத்தம் 1 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நிறுவனங்களின் கடும் போட்டி, அமெரிக்க வரிகள், ஐரோப்பாவில் குறையும் தேவை ஆகியவை இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
செய்தியாளர் - m.மீரா
வாகனத் துறையிலேயே மிகப்பெரிய அளவிலான மறுசீரமைப்பு நடவடிக்கையாக அமையக்கூடிய வகையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்த ஜெர்மனியில் உள்ள நான்கு தொழிற்சாலைகளை மூடவும், 1,00,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவும் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 9-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள இந்தத் திட்டங்கள் குறித்து, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மேற்பார்வைக் குழு உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதலீடுகளை 15 சதவீதம் வரை குறைக்கவே இந்த முடிவு என்று அதன் தலைமை நிர்வாகி ஆலிவர் புளூம் (Blume) கூறியுள்ளார்.
சீனப் போட்டியாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் அழுத்தம், அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான கடுமையான வரிகள் மற்றும் ஐரோப்பாவில் குறைந்து வரும் தேவை ஆகிய சவால்களை இந்நிறுவனம் எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சூழ்நிலைகள் தங்கள் வணிக மாதிரியைத் தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல் அறிந்தவர்களின் கூற்றுப்படி, ஹனோவர் (Hanover), ஸ்விகாவு (Zwickau), எம்டன் (Emden) மற்றும் ஆடியின் நெக்கர்சுல்ம் (Neckarsulm) ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளை மூடுவது 45,000-க்கும் மேற்பட்டவர்கள் வேலையை இழக்கும் வாய்ப்பு இருக்கிறது.
மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், 1,00,000 பேரை பணிநீக்கம் செய்வதும், நான்கு உற்பத்தி ஆலைகளை மூடுவதும் வாகனத் தொழில்துறையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கையாக இருக்கும்.
இது, 2009-ல் ஜிஎம் (GM) நிறுவனம் திவாலாவதற்கு முன்னர், 1990களின் தொடக்கத்தில் நான்கு ஆண்டுகளில் 74,000 வேலைவாய்ப்புகளைக் குறைத்து 21 ஆலைகளை மூடிய அல்லது செயல்பாட்டை நிறுத்திய நடவடிக்கைகளுக்கும் இணையானதாக இருக்கும்.

