\
AI controversy shakes government! Key suspect faces prison sentence.
crocodileREUTERS

AI-யால் வந்த வினை! அரசையே அதிரவைத்த சம்பவம்! சிறைக்குச் செல்லும் நபர்?

AI-யை விளையாட்டாக பயன்படுத்தி செய்த ஒரு செயல், தற்போது அவருக்கே தலைவலியாக மாறியிருக்கிறது.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார். ர

AI... ஒட்டுமொத்த உலகையும் தன் கைக்குள் அடைக்கத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பம். இருப்பதை இல்லாதது போன்றும்... இல்லாததை இருப்பது போன்றும் மாற்ற முடியும். கற்பனைக்கே எட்டாதவற்றைக்கூட கண் இமைக்கும் நேரத்தில் AI உருவாக்கிவிடுகிறது. இப்படித்தான், AI-யை விளையாட்டாக பயன்படுத்தி செய்த ஒரு செயல், தற்போது அவருக்கே தலைவலியாக மாறியிருக்கிறது. மியான்மர் நாட்டைச் சேர்ந்த 30 வயதான யே லின், கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவருக்கு, சிங்கப்பூரின் பாண்டன் நீர்த்தேக்கம் பகுதியில் முதலை இருப்பதாகக் கூறி, AI மூலம் உருவாக்கப்பட்ட முதலைப் படத்தை அனுப்பியிருக்கிறார்.

crocodile
crocodileREUTERS

அந்தப் படம் எப்படியோ அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்ற நிலையில், சிங்கப்பூரின் தேசிய நீர்வளத்துறையான (PUB) பாண்டான் நீர்தேக்க பகுதியில் முதலை இருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கியது. படம் உண்மையானதா என்பதை உறுதி செய்ய PUB பல்வேறு AI கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், அந்தக் கருவிகளின் முடிவுகள் உறுதியானதாக இல்லாததால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, PUB மற்றும் தேசிய பூங்காக்கள் வாரியம் இணைந்து அந்தப் பகுதியில் முதலை இருக்கிறதா எனத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டன. அதுமட்டுமல்லாமல், சிங்கப்பூர் படகோட்டுதல் சங்கம் மற்றும் கேனோ கூட்டமைப்புக்கு, அந்த நீர்த்தேக்கத்தில் நடைபெறும் அனைத்து நீர்விளையாட்டுகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அடுத்த நாளே அந்தப் படம் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டதுடன், நீர்விளையாட்டுகளும் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டன. மேலும், PUB காவல்துறையில் புகார் அளித்தது.

இதற்கிடையில், காவல்துறை நடத்திய விசாரணையில், யே லின்-தான் AI மூலம் அந்த முதலைப் படத்தை உருவாக்கி, தனது சக ஊழியருக்கு அனுப்பியது தெரியவந்தது. மேலும், AI மூலம் உருவாக்கிய படங்களை நீக்கியதுடன், Gemini செயலியில் இருந்த பயன்பாட்டு வரலாற்றையும் அவர் நீக்கியதாகக் கூறப்படுகிறது.

crocodile
crocodileREUTERS

இதன் அடிப்படையில், தவறான தகவலைப் பரப்பியது மற்றும் நீதியின் செயல்பாட்டுக்கு இடையூறு செய்தது என இரண்டு பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தவறான தகவலைப் பரப்பிய குற்றச்சாட்டில் யே லின்-க்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 10,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது... விளையாட்டாக AI மூலம் உருவாக்கிய ஒரு புகைப்படம், அதிகாரிகளின் தேடுதல் நடவடிக்கை முதல் நீர்விளையாட்டுகளுக்குத் தடை வரை சென்றதோடு, தற்போது நீதிமன்ற வழக்காகவும் மாறியுள்ளது. AI மூலம் உருவாக்கப்படும் ஒரு போலிப் படம்... எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றொரு உதாரணமாக மாறியுள்ளது.

AI controversy shakes government! Key suspect faces prison sentence.
பிரான்சில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்.. தற்காலிகமாக மூடப்பட்ட 400 பள்ளிகள்.. காரணம் என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com