ட்விட்டரை விட்டு தாமாக வெளியேறும் ஊழியர்கள்.. எலான் மஸ்கின் சர்ச்சையான பதில்!
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு தொடர்ச்சியாக பணி நீக்கம் செய்து வந்தார். இந்த நடவடிக்கைக்கு பலர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மீது தொடர்ச்சியான அழுத்தத்தையும் கொடுத்து வந்தார். இதனால் தற்போது ஏராளமானா ஊழியர்கள் ராஜினாமா செய்ய தொடங்கியுள்ளனர்.
ட்விட்டரில் எஞ்சியிருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களிடம், அதிக நேரம் தீவிரமாக வேலை செய்ய வேண்டும் அல்லது நிறுவனத்தை விட்டு நீக்க வேண்டும் என காலக்கெடுவை தொடர்ந்து முன்வைத்து வந்தார்.
காரணம் முன்னதாக கிட்டதட்ட 50% ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்ததால், எஞ்சிய ஊழியர்களுக்கு பணி சுமை அதிகமானது. இதனால் 12 மணி நேரம் வரை அலுவலக வேலை நீட்டிப்பதாகவும், வார விடுமுறையும் மறுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஊழியர்களுக்கு அதிக மன அழுத்தமும், பணியின் உத்தரவாதமின்மையும் அதிகரித்துள்ளது. எலான் மஸ்க் ஊழியர்களின் நலன் மீது துளியும் அக்கறையில்லாமல் நடந்துகொள்வதாகவும் ஊழியர்களால் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் தாமாகவே வேலையை ராஜினாமா செய்ய தொடங்கியுள்ளனர். வேலை செய்யும் இடத்தை நேசியுங்கள் (Love Where You Work) என்ற ஹேஷ்டேக்குடன் , ட்விட்டர் நிறுவனத்திலிருந்து வெளியேறுவதை, ட்விட்டரிலேயே பதிவிட்டு வருகின்றனர். #LoveWhereYouWork என்பது ட்விட்டர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை பற்றி எலான் மஸ்க் கூறுவது, ‘’ திறமையான ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு போகவில்லை. அவர்கள் தங்களது பணியை தொடருகிறார்கள்’’ என்றுள்ளார். எலான் மஸ்க் அளித்த இந்த பதிலால் உலகம் முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.