பெண் பத்திரிகையாளர் தொடர்ந்த வழக்கு: டொனால்டு ட்ரம்ப் 83.3 மில்லியன் டாலர் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

பெண் பத்திரிகையாளர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் 83.3 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்புதிய தலைமுறை

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்நாட்டில் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.

அந்த வகையில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே, ஆகியோர் களத்தில் உள்ளனர். இவர்களில் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் ஜோ பைடன், ட்ரம்பை எதிர்த்து மீண்டும் நிற்கிறார். இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள ட்ரம்பிற்கு, தற்போது சிக்கல் ஒன்று உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்கோப்புப் படம்

அமெரிக்க பத்திரிகையாளரான ஜீன் கரோல் என்பவர் டொனால்டு ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். கடந்த 1990-ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிகவளாகத்தில் உடை மாற்றும் அறையில் ட்ரம்ப் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜீன் கரோல் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ட்ரம்ப், தனது சமூக வலைதளத்தில் ஜீன் கரோலை விமர்சித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டார்.

அவர், ’ஜீன் கரோலைப் பற்றி தான் கேள்விப்பட்டதே இல்லை. தனது புத்தகங்களின் விற்பனையை அதிகரிக்க இப்படியான ஒரு கதையை உருவாக்கியுள்ளார். கரோல் புகழுக்கான பசியுடன் இருக்கிறார், தனக்கு எதிரானவர்களுக்கு எதிராகப் பேசுவதற்கு ஆதரவாளர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார்’ என குற்றஞ்சாட்டியிருந்தார்.

பின்னர் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, 2019ஆம் ஆண்டு ட்ரம்ப் மீது வழக்கு தொடர்ந்த ஜீன் கரோல், தனக்கு 10 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர்.

இதன்படி, எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு நஷ்ட ஈடாக டொனால்டு ட்ரம்ப் 83.3 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 692 கோடி ரூபாய்) வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எழுத்தாளர் ஜீன் கரோல் கேட்டதைவிட சுமார் 10 மடங்கு அதிக தொகையை இழப்பீடாக வழங்க ட்ரம்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னதாகவே நீதிமன்றத்தில் இருந்து ட்ரம்ப் வெளியேறினார். இது ட்ரம்பிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், அவர் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ”எங்கள் சட்ட அமைப்பு கட்டுப்பாட்டில் இல்லை, மேலும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இது அமெரிக்கா அல்ல” என்றார்.

தீர்ப்பு குறித்து ஜீன் கரோல், "இந்த தீர்ப்பு, வீழ்த்தப்படும்போது எழுந்து நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். மேலும் ஒரு பெண்ணை வீழ்த்த முயற்சிக்கும் ஒவ்வொரு கொடுமைக்காரனுக்கும் மிகப்பெரிய தோல்வி" என்று குறிப்பிட்டார். இந்த தீர்ப்பு ட்ரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com