30 நிமிடத்துக்கு ஒரு மரணம்.. அலறித்துடிக்கும் பொதுமக்கள்.. உலகை உலுக்கும் அடுத்த வைரஸ்!
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகாண் மாகாணத்தில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று, சுனாமி வேகத்தில் உலகம் முழுவதும் பரவியது. இதன் காரணமாக 90% நாடுகளில் லாக் டவுண் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் உலக நாடுகள் ஒற்றுமையாக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக தற்போது உலகமே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளது. இந்த சூழலில் ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசு (DR Congo) மற்றும் உகாண்டாவில் வேகமாகப் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது.
மே 2026-ல் தொடங்கிய இந்த எபோலா தொற்று காரணமாக, இதுவரை 4,900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் காங்கோ அரசு தெரிவித்துள்ளது. இது காங்கோ வரலாற்றிலேயே மிக மோசமான மற்றும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய பதிப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் தீவிர பாதிப்பு காரணமாக இந்த வைரஸ் பரவலை கடந்த மே மாதமே உலகளாவிய சுகாதார அவசரநிலையாக WHO அமைப்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் (UN) மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவர் டாம் பிளெட்சர் (Tom Fletcher) வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை மீறி மிக வேகமாகப் பரவி வருகிறது என்றும், காங்கோவில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு நபர் எபோலா பாதிப்பால் உயிரிழப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் எபோலா வைரஸ் அதிவேகமாக முன்னேறி வருகிறது என்றும், அதைத் தடுக்க சர்வதேச சமூகத்தின் உடனடி வேகமும் உதவிகளும் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வழக்கமாக எபோலா தாக்குதல்களுக்கு வைரஸ் தாக்குதல்களுக்கு 'சயீரே' (Zaire) வகை தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் பயன்படுத்தப்படும்.
ஆனால், தற்போது 'புண்டிபுக்யோ' (Bundibugyo virus) என்ற அரிதான எபோலா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்குத் துல்லியமாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட மருந்துகளோ இதுவரை இல்லை என்பதால் இந்த வைரஸ் பாதிப்பு உலகளவில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

