ஆட்சியை காப்பாற்ற இறுதி முயற்சி: நெதன்யாகுவின் அடுத்த திட்டம் என்ன? ஒன்றிணையுமா எதிர்கட்சிகள்!
இஸ்ரேல் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஐசன்கோட் அரபு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உள்ளார். இதை எதிர்த்து நெதன்யாகு ஒற்றுமை அரசின் அவசியத்தை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் அரசியல் நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது.
கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கட்சி கூட்டணி 53 இடங்களிலும், முன்னாள் ராணுவத் தளபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான ஐசன்கோட்டின் கூட்டணி 48 இடங்களிலும் வென்றது.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 19 இடங்களில் வென்ற அரபு கட்சிகளான ஜாயிண்ட் லிஸ்ட் (Joint List) மற்றும் ராம் (Raam) கட்சிகள் தங்கள் ஆதரவை ஐசென்கோட்டிற்கு வழங்க முன்வந்துள்ளதால், அவரது கூட்டணிக்கு 67 இடங்கள் கிடைத்தது. இதனால் அவருக்கு ஆட்சியமைக்க தேவையான 61 இடங்கள் கிடைத்துள்ளதால் இஸ்ரேல் அதிபர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதனால் எதிர்க்கட்சி கூட்டணி மற்றும் அரபு கட்சிகளின் வெளிப்புற ஆதரவுடன் ஐசென்கோட் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
அதிக இடங்களில் வென்ற கூட்டணி என்ற காரணத்தால் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் (Isaac Herzog) நெதன்யாகுவை முதலில் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்காத நிலையில், அதிகாரத்தை தக்கவைக்கும் முயற்சியாக ஒரு முக்கிய அறிவிப்பை பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்ரேல் தற்போது எதிர்கொள்ளும் சவால் காரணமாக ஒற்றுமை அரசு முற்றிலும் அவசியம் என்றும், ஈரான் மற்றும் இஸ்லாத்தை ஆதரிப்பவர்கள் உடன் சேர்ந்து ஒரு அரசை அமைக்க முடியாது.ஹமாஸ் ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு அரசை அமைத்து ஈரானை எதிர்த்துப் போரிட முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் நமக்கு முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள நாம் ஒன்றுபட வேண்டும்.இது குறித்து நாம் கலந்துரையாடி, இறைவனின் உதவியுடன் தேவையானதைச் செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரபு கட்சிகளின் ஆதரவை பெற்று ஐசன்கோட் பிரதமராகவுள்ள நிலையில், அதை தடுக்கும் விதமாகவே நெதன்யாகு இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.ஒருவேளை அரபு கட்சிகளின் ஆதரவை ஐசன்கோட் நிராகரித்தால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், மீண்டும் இஸ்ரேலில் தேர்தல் நடைபெறும் நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

