சிரியா மசூதியில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலி.. 21 பேர் காயம்! ஐ.நா. தலைவர் கண்டனம்!
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர், 21 பேர் காயமுற்றனர். இந்த கொடிய தாக்குதலை ஐநா தலைவர் கண்டித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிரியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நேரிட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஹோம்ஸ் நகரின் அலாய்டீ சமூகத்தினருக்கு சொந்தமான ’இமாம்அலி இபின் அபி தாலிப் மசூதி’யில் ஏராளமான இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததாக சிரியாவின் அதிகாரப்பூர்வ சானா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் 8பேர் உயிரிழந்துள்ளதாகவும், 21 பேர் காயமுற்றுள்ளதாகவும் சானா செய்தியை சுட்டிக்காட்டி சிரியா சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி தீவிரவாதிகள் மசூதிக்குள் திட்டமிட்டு குண்டு வைத்திருந்ததாகத் தெரியவந்துள்ளது.
ஐநா தலைவர் கண்டனம்..
சிரியாவில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐநா தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்ட எக்ஸ் தள பதிவில், “சிரியாவின் ஹோம்ஸில் உள்ள அலி பின் அபி தாலிப் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலையும், காயமடைந்த அனைவருக்கும் எனது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

