
கத்தார் நாட்டில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை வழங்க அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மரண தண்டனை பெற்றவர்கள் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உளவு பார்த்ததாக இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இன்று கத்தார் நீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனை அறிவித்துள்ளதாக தகவல்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் குற்றம் சாட்டப்பட்ட 8 இந்தியர்களும் தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பணி புரிந்த "அல் தாரா" நிறுவனம் நீர்மூழ்கி கப்பல்கள் தொடர்பான திட்டத்தில் இணைந்திருந்தது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த எட்டு இந்தியர்கள் இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கத்தார் நாட்டில் விசாரணை முழுவதும் ரகசியமாக நடத்தப்பட்டதாக தகவல்.
கேப்டன்கள் நவ்ஜீத் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சௌரப் வசிஸ்த் ஆகியோருக்கும் கமாண்டர்கள் அமித் நாக்பால், புர்னெது திவாரி, சுகுனாகர் பாகலா, சஞ்சீவ் குப்தா ஆகியோருக்கும் மாலுமி ராகேஷ்-க்கும் மரண தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களின் விடுதலையை பாதுகாப்பதற்கான அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதற்காக இந்திய அரசு உறுதி அளித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், “கத்தார் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளோம். விரிவான தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளது. அவர்களது குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதாகவும் அனைத்து சட்ட விதிகளையும் ஆலோசித்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.