ரஷ்யா | மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7.8 ரிக்டர் அளவில் பதிவு!
ரஷ்யாவின் கம்சாட்கா பிராந்தியத்தில் இன்று காலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரஷ்யாவின் கம்சாட்கா பிராந்தியத்தில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பெட்ரோ பாவ்லோஸ்க் பகுதிக்கு கிழக்கில் 130 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இடத்தை மையமாக வைத்து, 10 கிலோ மீட்டர் ஆழத்தில், இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களில், 5.8 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுக்குமாடி கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் அச்சமடைந்தனர். வெளியே நிறுத்தப்பட்ட கார்கள் குலுங்கிய காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தொடர் நிலநடுக்கங்களால், கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், இயல்பு நிலை திரும்பியதால், சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. முன்னதாக, இதே பிராந்தியத்தில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இதே பகுதியில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.8 ஆகப் பதிவானது. அந்த நிலநடுக்கம், கடந்த 14 ஆண்டுகளில் உலகிலேயே மிக வலுவான ஒன்றாகக் கருதப்பட்டது.