ரஷ்யாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. 7.4 ரிக்டர் அளவில் பதிவு.. சுனாமி எச்சரிக்கை!
ரஷ்யாவின் கிழக்கில் உள்ள கம்சட்கா கடற்கரையில் இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை நகரமாக கம்சங்கா பிராந்தியம் உள்ளது. இந்தப் பிராந்தியத்தின் அருகே இன்று காலை 8.03 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 7.4 ரிக்டர் அளவில், 39.5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் கடற்பரப்பில் ராட்சத அலை உருவாகும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு, சேதம் பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக, இதே பகுதியில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.8 ஆகப் பதிவானது. அந்த நிலநடுக்கம், கடந்த 14 ஆண்டுகளில் உலகிலேயே மிக வலுவான ஒன்றாகக் கருதப்பட்டது. மேலும், அந்தச் சமயம் ஜப்பான், அமெரிக்கா மற்றும் பசிபிக் தீவு நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடல் அலைகள் சுமார் 4 மீட்டர் அளவுக்கு எழுந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அமெரிக்காவின் ஹவாய், அலாஸ்கா மற்றும் மேற்கு கடற்கரை மாநிலங்களில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, அவசர நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஜூலை மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜப்பானில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களை உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டது. கம்சட்கா தீபகற்பம், நில அதிர்வு நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றது. 1952ஆம் ஆண்டில், இங்கு 9.0 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். சமீபத்திய இந்த நில அதிர்வுகள், அப்பகுதியின் புவியியல் உறுதியற்ற தன்மையை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.