அமெரிக்காவில் இந்தியர்களுக்கு சிக்கல்.. 7,248 லாரி ஓட்டுநர்கள் பணிபுரிய தடை! அதிர்ச்சி காரணம்!
அமெரிக்காவில் 7,248 லாரி ஓட்டுநர்கள் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ’அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்கிற கொள்கையில் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குடியேற்றக் கட்டுப்பாடுகள், விசா கட்டணத்தில் மாற்றம் என அவற்றில் அடக்கம். குறிப்பாக, அமெரிக்காவிற்கு வேலைக்காக வரும் வெளிநாட்டினரைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், ஆங்கிலம் தெரியாத 7 ஆயிரம் லாரி ஓட்டுநர்கள் பணிபுரிய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் இந்திய ஓட்டுநர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய லாரி ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான உயர்மட்ட சாலை விபத்துகளுக்குப் பிறகு இந்த விதி அமலாக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் கலிபோர்னியா நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில், ஓர் இந்திய ஓட்டுநர் மூன்று அமெரிக்கர்களைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதன்விளைவாக, அமெரிக்க போக்குவரத்துத் துறை செயலாளர் ஷான் டஃபி, "வர்த்தக லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் ஆங்கிலத்தில் பேசவும், புரிந்துகொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்" என்று அறிவித்தார். புதிய விதிகளின்படி, லாரி ஓட்டுநர்கள் பொதுமக்களுடன் உரையாட, சாலை அறிகுறிகளைப் புரிந்துகொள்ள, அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள மற்றும் சரியான பதிவேடுகளைப் பராமரிக்க போதுமான ஆங்கிலத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
அந்த வகையில், அமெரிக்காவில் கட்டாயமாக்கப்பட்ட ஆங்கில மொழிப் புலமை தேர்வுகளில் தோல்வியடைந்த காரணத்தால், 7,248 சரக்கு லாரி ஓட்டுநர்கள் பணி செய்ய தகுதியற்றவர்களாக நீக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையால், இந்திய வம்சாவளியை சேர்ந்த, குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த சுமார் 1.30 லட்சம் முதல் 1.50 லட்சம் வரையிலான ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தின்கீழ் மீண்டும் கொண்டுவரப்பட்ட இந்த விதி, லாரி நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் குழுக்களிடையே எச்சரிக்கையை எழுப்பியுள்ளது. இது புலம்பெயர்ந்த ஓட்டுநர்களை நியாயமற்ற முறையில் குறிவைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இது லாரி ஓட்டுநர் பற்றாக்குறையை மோசமாக்கும் எனக் கருதப்படுகிறது.

