உகாண்டா: 70 வயது பெண்ணிற்கு இரட்டைக் குழந்தைகள்!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 70 வயதான பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
மாதிரிப்படம்
மாதிரிப்படம்freepik

குழந்தைப்பேறு கிடைக்காமல் இன்றைய இளம்தம்பதிகள் வேதனைப்படுவது உண்டு. திருமணமான புதிதில் ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் குழந்தை வரத்திற்காக ஏங்கி காத்துக் கொண்டிருக்கும் தம்பதியர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு பல்வேறு மருத்துவக் காரணங்கள் இருக்கிறது.

இது ஒருபுறமிருந்தாலும், மறுபுறம் குழந்தை வரம் கிடைப்பதற்காக கோயில்கள் மற்றும் மருத்துவமனைகளில் தவம் கிடப்போரும் அதிகம். அந்த வகையில், தற்போது மருத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றம், வயதான காலத்திலும் குழந்தை பிறப்பதைச் சாத்தியமாக்கியுள்ளது. இதன்மூலம் பல பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்து தங்களது வாழ்க்கையை வசந்தகாலமாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 70 வயதான பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். தலைநகர் கம்பாலாவில் இருந்து 120 கி.மீ தொலைவில் மாசா என்ற புறநகர்ப் பகுதியில் வசித்து வருபவர் சஃபினா நமுக்வாயா. இவருடைய முதல் கணவர் 1992-ல் இறந்துள்ளார். அந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பின்னர் 1996-ல் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து இவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால், அந்தப் பெண்மணி அவ்வூர் மக்களின் பழிச்சொல்லுக்கு ஆளாகி இருக்கிறார்.

பின்னர், அவருக்கு, 2020-ல் முதல் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், செயற்கை கருத்தரித்தல் (IVF) முறையில் மீண்டும் கர்ப்பமான அவர், கடந்த 29-ஆம் தேதி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். தாயும் சேயும் மருத்துவமனை கவனிப்பில் இருப்பதாகவும், மூவரும் நலமாக உள்ளனர் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க; படை வீரர்களை அதிகரிக்க திட்டம்... பெண்கள் 8 குழந்தைகளைப் பெறவேண்டும்.. ரஷ்யா அதிரடி

இதுகுறித்து சஃபினா நமுக்வாயா, குழந்தை இல்லாததால் கேலிக்கு உள்ளானதைத் தொடர்ந்து நான் குழந்தைகளைப் பெற விரும்பினேன். நான் பிறரின் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டேன், அவர்கள் வளர்ந்து என்னைத் தனியாக விட்டு விடுவதைப் பார்த்தேன். நான் வயதாகும்போது என்னை யார் கவனித்துக்கொள்வார்கள் என்று யோசித்தேன். எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கப்போவதை அறிந்தவுடன் என் கணவர் என்னைக் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இதனால் எனது கர்ப்பகாலம் கடினமானதாக இருந்தது. நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைச் சுமக்கிறீர்கள் என்று கூறுவது ஆண்களுக்குப் பிடிக்காது. நான் இங்கு அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அவர் ஒருபோதும் இங்கு வரவில்லை" என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தல்ஜிந்தர் கவுர் தனது 70-ஆவது வயதில் ஆண் குழந்தை ஒன்றை பெற்று எடுத்தார். அடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆந்திராவில் 74 வயது மூதாட்டி ஒருவர் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ’அடுத்த பெண்ணைப் பார்ப்பியா..’ - அமெரிக்காவில் காதலனின் கண்ணில் ஊசியால் குத்திய காதலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com