\
Mojtaba & Trump
Mojtaba & Trump ANI

இழப்பீடு ரூ.25 லட்சம் கோடி.. இல்லையேல் தாக்குதல்! அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்கா மீது 290 பில்லியன் டாலர் இழப்பீடு கோரிய ஈரான்.. அமெரிக்காவின் நடவடிக்கைகள் தற்காத்தல் உரிமைக்கு எதிரானவை என ஈரான் குற்றச்சாட்டு.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

பல ஆண்டுகளாக அமெரிக்கா மேற்கொண்ட விரோத நடவடிக்கைகளால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவிடம் 290 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 லட்சம் கோடி) இழப்பீடு கோரி ஈரான் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா கடற்படை மூலம் முடக்க முயன்றால், அதற்கு அனைத்து வழிகளிலும் பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரித்துள்ளது.

ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரானின் உள்நாட்டு நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன. இதன் அடிப்படையில், 290 பில்லியன் டாலர் இழப்பீடு கோரப்படுவதாக நீதித்துறை வழக்கறிஞர்கள் மையத்தின் தலைவர் ஹசன் அப்துல்லான்பூர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தத் தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டது, எந்தெந்த வழக்குகளுக்காக இந்த இழப்பீடு கோரப்படுகிறது என்ற விரிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

iran war
iran war reuters

அதேபோல், அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளுக்காக வளைகுடா அரபு நாடுகளின் பகுதிகளைப் பயன்படுத்த அனுமதித்ததாகக் கூறி, அந்த நாடுகளுக்கு எதிராகவும் ஈரான் வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. இருப்பினும், இந்தத் தீர்ப்புகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாகவோ, அதன்படி இழப்பீட்டை வழங்க ஒப்புக்கொண்டதாகவோ எந்தத் தகவலும் இல்லை.

இதற்கிடையே, ஈரான் துறைமுகங்களைச் சுற்றி இருக்கும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை ராணுவ ஆக்கிரமிப்பாகக் கருதுவதாகக் கூறிய ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி, அமெரிக்காவின் நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், கிடைக்கும் அனைத்து வழிகளிலும் எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

iran war
iran war reuters

மேலும், ஐ.நா. சாசனத்தின் 51-வது பிரிவின்படி, தற்காத்துக்கொள்ள ஈரானுக்கு உரிமை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளும் கடற்படை முற்றுகையும் தங்கள் நாட்டுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே என்றும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றி, கடற்படை முற்றுகையை நிறுத்தினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியிலும் பிராந்தியத்திலும் நீடித்த பாதுகாப்பை மீட்டெடுக்க முடியும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

Mojtaba & Trump
விண்வெளியில் அணு ஆயுதம்? ரஷ்யாவால் அதிரும் உலகம்!