அன்றும், இன்றும்.. 11A இருக்கையில் உயிர்பிழைத்த இருவர்! இந்தியாவில் அதிர்ஷ்டம்.. ஐரோப்பாவில் எப்படி?
அகமதாபாத் விமான விபத்தில் ஒருவர் மட்டும் உயிர்பிழைத்த அதிசயம்!
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதியது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். ஆம், 242 பேரில் 241 பேரும் பலியாக, ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார் என்ற தகவல் நிச்சயம் ஆச்சர்யத்தை அளிக்கக்கூடியதுதான். ஆம், கட்டடத்தின் மீது மோதியதோடு நின்றுவிடாமல் அது விழுந்த வேகத்தில், அதில் இருந்த எரிபொருளால் வெடித்து மிகப்பெரிய தீப்பிழம்பைக் கக்கியதால் எவருமே உயிர் பிழைத்திருக்க முடியாது என்றுதான் சொல்லத் தோன்றும்.
ஆனால், அவர் உயிர் பிழைத்தது உண்மையிலேயே மெடிக்கல் மிராக்கல்தான். இதற்கு, அவர் பயணித்த 11a என்ற இருக்கையே எனக் காரணம் தெரிவிக்கப்பட்டது. அதாவது, ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் 11ஏ இருக்கை எகானமி வகுப்பில் முதல் வரிசையில் உள்ளது. இந்த ஜன்னல் இருக்கை, விமானத்தின் வலது பக்கத்தில் உள்ளது. மேலும், விமானத்தின் இறக்கைக்கு இரண்டு வரிசைக்கு முன்னதாக உள்ளது. நெருக்கடியான சமயங்களில் வெளியேறும் அவசர வழியை ஒட்டியே இந்த 11ஏ இருக்கை அமைந்துள்ளது. விபத்து நடக்கும் சில நொடிகளுக்கு முன் பயணிகளிடம் எமர்ஜென்சி தகவல் விதிப்படி தெரிவிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி அந்த பயணி உஷாராக இருந்துள்ளார். சீட் பெல்ட் அணியாத இவர்.. விமானம் தரைக்கு அருகே வந்து சரியாக மோதும் நொடி சுதாரித்துள்ளார். விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அதன் வழியாக அப்படியே எகிறி குதித்து காயங்களோடு பிழைத்துள்ளார்.
27ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்து நபரை உயிர் பிழைக்க வைத்த 11ஏ இருக்கை
இதேபோன்று, 27 ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்தைச் சேர்ந்த நடிகரும் பாடகருமான ருவாங்சக் லோய்ச்சுசக், அதே 11ஏ இருக்கையில் பயணித்து, விமானம் விபத்துக்குள்ளானபோது அதிலிருந்து உயிர்பிழைத்த கதையை தற்போது நினைவுகூர்ந்துள்ளார். 1998 டிசம்பர் 11ஆம் தேதி, தெற்கு தாய்லாந்தில் தரையிறங்க முயன்ற தாய் ஏர்வேஸ் TG261 என்ற விமானம், நிலைதடுமாறி சதுப்பு நிலத்தில் விழுந்தது. அதில் பயணித்த 146 பேரில் 101 பேர் பலியாகினர். இதில், 11ஏ இருக்கையில் பயணித்த ருவாங்சக் மிகச் சுலபமாக உயிர் தப்பியுள்ளார். அப்போது, இவருடைய பேட்டியும் படங்களும் தலைப்புச் செய்திகளாக மாறியிருந்தன. 1998ஆம் ஆண்டு முதல் தன்னிடம் போர்டிங் பாஸ் இல்லை என்று குறிப்பிட்ட ருவாங்சாக், ஆனால் செய்தித்தாள் கட்டுரைகள் தனது இருக்கை எண் மற்றும் உயிர்வாழ்வை ஆவணப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். இந்த விபத்திற்குப் பிறகு அவர் ஒரு 10 ஆண்டுகாலமாய் மீண்டும் விமானத்தில் பயணிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்திலிருந்து விஸ்வேஷ் குமார் உயிர் தப்பியதைத் தொடர்ந்து, அவரது இருக்கை (11ஏ) பற்றிய செய்திகளே இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனையடுத்து, 11 ஏ இருக்கை இந்தியாவில் அதிர்ஷ்டம் நிறைந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, விமான விபத்து நடைபெறும்போது, இந்த இருக்கையில் இருப்பவர்கள் மட்டும் விரைவில் தப்புவதால், அது அதிர்ஷ்டம் நிறைந்ததாக பலரால் நம்பப்படுகிறது. அவசர வெளியேற்றத்துக்கான கதவுக்கு அருகே அமர்ந்திருப்பதே இந்த 11ஏ இருக்கை அதிர்ஷ்டமான இருக்கையாக தொடர்ந்து நீடிக்கிறது. தப்பிக்க வேண்டும் என்று நினைக்காவிட்டால்கூட, இந்த கதவுக்கு அருகே வருபவர்களால், இவர் வேகமாக வெளியேற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
ஐரோப்பிய பயணிகள் வெறுக்கும் 11ஏ இருக்கை.. காரணம் ஏன்?
ஆனால், இந்த இருக்கையை ஐரோப்பிய விமானங்களில் பயணிக்கும் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. போயிங் 787ஐப் போலவே ஐரோப்பியாவில் போயிங் 737 எனப்படும் விமான ரகங்கள் இயக்கப்படுகின்றன. அந்த விமானங்களில் 11ஏ இருக்கை லக்சுரி வகுப்புக்கு அடுத்தபடியாக, அதாவது எகனாமி வரிசையில் முதல் இருக்கையாக இருக்கும். ஜன்னலை ஒட்டி இருக்கும் இந்த இருக்கையை பெரும்பாலான ஐரோப்பியர்கள் விரும்புவதில்லையாம். காரணம், அந்த இருக்கை அமைந்திருக்கும் இடம் வசதியாக இருக்காது. இருக்கையை மடக்கி ஓய்வெடுப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பதால் பெரும்பாலான ஐரோப்பிய பயணிகள் அந்த இருக்கையை தவிர்த்து விடுவார்களாம். இதனால் இந்த இருக்கையானது அங்கு வெறுக்கப்படுகிறது.
பொதுவாக நிபுணர்கள், அவசர கதவுக்கு அருகில் இருக்கும் 5 வரிசைகளுக்குள் இருக்கும் இருக்கைகள் பாதுகாப்பானவை என்கிறார்கள். இன்னும் சிலரோ, விமானத்தின் பின்பகுதியில் இருக்கும் நடு இருக்கைகள்தான் பாதுகாப்பானவையாக என்கின்றனர். இதன்மூலம் உயிர் பிழைத்த நபர்களின் விவரங்களையும் கடந்த கால விபத்துகளையும் அவர்கள் எடுத்தாளுகின்றனர். ஆனால் உண்மையில் உயிர் பிழைப்பது என்பது விபத்து நிகழ்வதைப் பொறுத்துத்தானே தவிர, இருக்கையால் அல்ல என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.