”என் குழந்தையே.. நீ எங்கே போனாய்?” - விமான ஊழியரின் தாய் கதறல்.. வைரலாகும் வீடியோ!
சோகத்தில் மூழ்கிய விமான ஊழியரின் குடும்பம்
குஜராத்திலிருந்து இன்று லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதியது. இந்த விபத்தில், தற்போது வரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் மோதியதால் அங்கிருந்தவர்களில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போதைய தகவல்படி, இந்த விமான விபத்தில் விஸ்வாஸ் குமார் என்பவர் உயிர் பிழைத்திருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிவதில் இது மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த விமானத்தில் 230 பயணிகள், 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்துள்ளனர். அதில், விமான ஊழியரான நந்தோய் சர்மா கோங்பிரைலட்பமும் பயணித்துள்ளார். விபத்தில் இவரும் சிக்கியிருப்பதால் அவரைப் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
”நீ எங்கே போனாய்?”- கதறும் உறவினர்கள்
அக்குடும்பத்தினர் தரையில் மண்டியிட்டு, குடும்ப புகைப்பட ஆல்பங்களை வெறித்தனமாக புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்நபரின் புகைப்படத்தைத் தேடும்போது அவர்களின் முகங்களில் கண்ணீர் வழிந்தபடி உள்ளது. எனினும் விபத்து குறித்து கேள்விப்பட்டதும் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொள்கின்றனர். அதில் ஒருவர், “என் குழந்தையே... என் குழந்தையே... இந்தக் கைகளால் நான் உன்னைத் தூக்கினேனே? இப்போது, நீ எங்கே போனாய்? உன்னைப் பார்க்க வேண்டும். நீ எங்கே இருக்கிறாய்" என்று கதறி அழுகிறார். மற்றொருவரோ, “தயவுசெய்து என் தொலைபேசியைக் கொண்டு வா. அதில் அவளுடைய புகைப்படங்களைப் பார்க்க வேண்டும். இல்லையென்றால், எனக்கு பைத்தியம் பிடித்துவிடும்" என்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன், பார்க்கும் எல்லோரையும் கண்கலங்க வைக்கிறது.
இதற்கிடையே விமான விபத்து தொடர்பாக குஜராத் மாநில அரசு, அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. குடிமக்கள் மற்றும் பயணிகளின் உறவினர்கள் 079-232-51900 என்ற தொலைபேசி எண் அல்லது 9978405304 என்ற மொபைல் எண் மூலம் மையத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும், கூடுதலாக, அகமதாபாத் சிவில் மருத்துவமனை நோயாளி பராமரிப்பு மற்றும் அதிர்ச்சி மைய உதவி தொடர்பான விசாரணைகளுக்கு 6357373831 மற்றும் 6357373841 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.