கோவை: நடையோட்ட விளையாட்டு வீரரின் சாதனை வேட்கைக்கு தடையாக உள்ள வறுமை
ரேஸ் வாக்கர் என்னும் நடையோட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கோவையைச் சேர்ந்த மலை கிராமத்து இளைஞர் ஒருவர் வறுமை காரணமாக முறையான பயிற்சியை தொடர இயலாமல் தவித்து வருகிறார்.
அரசு உதவியினால் ஒலிம்பிக் போட்டி வரை சென்று சாதிக்க இயலுமென்ற நம்பிக்கையை மட்டும் உரமாகக் கொண்டு உழைத்து வரும் அந்த இளைஞர் குறித்து பார்க்கலாம்.
கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள புங்கம்பாளையம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ரேஸ்வாக்கர் மணிகண்டன். இந்திய அளவில் டாப் 10 இடத்திலும், தமிழக அளவில் முதலிடத்திலும் உள்ள மணிகண்டன் இவ்விளையாட்டில் ஏராளமான பதக்கங்களைக் குவித்துள்ளார். ரேஸ் வாக்கர் விளையாட்டில் மேலும் முன்னேறி அடுத்தகட்டத்தை அடைய மணிகண்டன் தன்னால் இயன்றளவு முயன்றாலும் அவரை வறுமை பின்னோக்கி இழுத்து வருகிறது.
இவ்விளையாட்டில் சிறு வயது முதல் ஆர்வத்துடன் பயிற்சியெடுத்து மாநில மற்றும் தேசிய அளவிலான 20 கிலோமீட்டர் தொலைவு கொண்ட போட்டிகளில் பங்கேற்று வரும் மணிகண்டன், காமன் வெல்த் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டுள்ளார். ஆனால் ஏழ்மையான விவசாயக் கூலி வேலை செய்து வரும் மணிகண்டனின் பெற்றோரால் மகனின் விளையாட்டு ஆர்வத்திற்கு பொருளாதார ரீதியில் உதவ இயலவில்லை. ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தற்போது ஊட்டியில் பயிற்சியளிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் கலந்து கொள்ள பொருளாதார வசதி இல்லாமல் கிராமத்திலேயே முடங்கிக் கிடக்கிறார் மணிகண்டன்.
ஏழ்மை காரணமாக அடுத்தகட்ட பயிற்சிகளை தொடர தேவையான ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் கூட இல்லாமல் தவிக்கிறார். ஆனாலும் மனம் தளராமல் தன்னிடமுள்ள பழைய ஷூக்களைக் கொண்டு கிராமத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் தன்னந்தனியாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தனித்துவமான தடகளப் போட்டியில் வரலாற்றுத்தடம் பதிக்க போராடி வரும் மணிகண்டனுக்கு மத்திய மாநில அரசுகள் உதவ முன் வர வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.