நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன?
வழக்கம்போல் தேவையான உதவிகள் தன்னிடம் இருந்து வரும் என மாவட்ட நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவில் நிலவிய முதல்வர் வேட்பாளர் சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலினும் கட்சி நிர்வாகிகளை உச்சபட்சப் பொறுப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் நீதி மையம் சார்பில் கமல்ஹாசனே முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது. ரஜினி தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் திடீரென நடிகர் விஜய் பனையூரில் உள்ள தனது இல்லத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. நிர்வாகிகளுடன் விஜய் பேசுகையில் மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள், வழக்கம்போல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.