நடவடிக்கைக்கு பயந்து வாய்மூடி இருக்கிறார் முதலமைச்சர்: தங்க தமிழ்ச்செல்வன் சாடல்
போயஸ் கார்டனில் நடைபெற்ற சோதனை குறித்து கண்டனம் தெரிவித்தால், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் வாய்மூடி முதலமைச்சர் மவுனமாக இருப்பதாக டிவி தினகரனின் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனை குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன், "போயஸ் கார்டனில் சோதனை நடத்தியதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. 2 கோடி தொண்டர்கள் இன்று இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர். இது யதார்த்தமான உண்மை. ஆனால் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ரெய்டு குறித்து ஒரு வார்த்தை கூட பேச பயப்படுகிறார்கள்.
சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற ரெய்டில் எடுக்கப்பட்ட டைரியில் முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்களின் பெயர்கள் உள்ளன. இவர்கள் ஏதாவது மத்திய அரசை தாக்கி பேசினால், அவர்கள் மீது வழக்கு பாயும். அந்த பயத்தில்தான் அவர்கள் வாய்மூடி மவுனமாக இருக்கிறார்கள். இதனை மக்களும் விரும்பவில்லை. தொண்டனும் விரும்பவில்லை. தக்க நேரத்தில் இவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்" என்றார்.