ஜெயலலிதா நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட போது அதிமுகவினரும் இப்படிதான் கொண்டாடினார்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியன் சுவாமி, “2ஜி வழக்கில் பின்னடைவு ஏற்படவில்லை. வழக்கறிஞர்கள் ஊழலுக்கு எதிராக போராடுவது தீவிரமாக இல்லை. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை. வழக்கின் துவக்கத்தில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கை தீவிரமாக விசாரித்தன. ஆண்டுகள் செல்ல செல்ல அவர்கள் சரியாக செயல்படவில்லை. 2ஜி முறைகேடு வழக்கில் நேர்மையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேர்மையான அதிகாரிகளை குறிவைத்து வழக்கில் இருந்து விலக்கினர். வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றவியல் நடைமுறை எதுவும் பின்பற்றபடவில்லை. வழக்கு முறையாக கையாளப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஜெயலலிதா நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட போதும் அ.தி.மு.கவினர் இப்படி தான் கொண்டாடினர். ஆனால் 6 மாதங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் சரியான தீர்ப்பு வந்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் மேல்முறையீடு செய்தால் நல்ல தீர்ப்பு வரும். 2ஜி வழக்கு தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்றார்.