அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!

அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் சூழலில், பிரதமர் மோடி இன்று (மார்ச் 7) பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல், மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி வரை எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி தீவிரமாக இருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று இடங்களை மட்டுமே பிடித்த பாஜக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று மம்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அதைத் தொடர்ந்து 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றன. முதல்கட்டமாக, 57 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை பாஜக நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டது. இதில் அங்குள்ள நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜிக்கு எதிராக அவரின் முக்கிய ஆதரவாளராக இருந்த சுவேந்து அதிகாரி பாஜக வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

இச்சூழலில் கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவருடன் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com