
மன்மோகன் சிங் ஆக்சிடெண்டல் பிரதமர் அல்ல, வெற்றிகரமானவர் தான் என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவுட் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் 2014 பொதுத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி அரசியலுக்கு மன்மோகன்சிங் பலிகடா ஆக்கப்பட்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து இந்தப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவைச் சேர்ந்த எம்பி சஞ்சய் ராவுட், மன்மோகன் சிங் வெற்றிகரமான பிரதமர்தான் என்று கருத்து தெரிவித்துள்ளார். ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தை சுற்றியுள்ள சர்ச்சை குறித்து அவர் கூறுகையில், “10 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த பிரதமரை மக்கள் மதிக்க வேண்டும், அவரை ஆக்சிடெண்டல் பிரதமராக நான் பார்க்கவில்லை. நரசிம்ம ராவிற்கு பிறகு நாடு ஒரு வெற்றிகரமான பிரதமரை பெற்றுள்ளது என்றால் அது மன்மோகன் சிங்தான்” என்றார்.
நரசிம்ம ராவிற்கு பிறகு அடல் பிஹாரி வாஜ்பாய், தேவ கௌடா, ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங், நரேந்திர மோடி உள்ளிட்டோர் நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.