'டேய்' என நண்பன் அழைக்கும்போது.. - நெகிழ்ந்த ரஜினிகாந்த் | Rajinikanth
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 1975 - 1979 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியில் பயின்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ், இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் காணொளி காட்சி மூலம் நடிகர் ரஜினிகாந்த் உரையாற்றினார்.
ரஜினிகாந்த் பேசிய போது, ``சுமார் 50 வருடங்களுக்குப் பிறகு எல்லோரும் சந்தித்திருக்கிறீர்கள். இதற்கு முன்பும் சந்தித்திருப்பீர்கள். பழைய நண்பர்களைப் பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என என்னால் உணர முடிகிறது. உங்கள் பல்கலைக்கழகத்தில் படித்த எத்தனையோ நபர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு சைலேந்திரபாபு, இறையன்பு, என்னுடைய சம்மந்தி வணங்காமுடி போன்றோரை குறிப்பிடலாம். சைலேந்திரபாபு செய்த விஷயங்களை எல்லாம் பதவியில் இருக்கும்போது செய்த விஷயங்கள் சாதாரணமானது கிடையாது, அதை தமிழ்நாடு மக்கள் மட்டுமல்ல, காவல் துறையும் எப்போதும் மறக்க முடியாதது. அதேபோல இறையன்பு அவர்களுக்கு தெரியாத விஷயமே இல்லை அவ்வளவு அறிவாளி. வணங்காமுடி சார்போல மென்மையான ஒருவரைப் பார்க்க முடியாதது. அவர் எனக்கு சம்பந்தியானதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
வாழ்க்கையில் நண்பர்கள் மிக முக்கியமானவர்கள். வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால், பழைய நண்பர்கள் கிடைப்பது அபூர்வம். நாம் பெரியவராக வளர்ந்ததற்குப் பிறகு, கணவன், அப்பா, தாத்தா, சார் என எத்தனை மரியாதையாக அழைத்தாலும், நம் பழைய நண்பன் பெயர் சொல்லி 'டேய்' என அழைக்கும்போது வரும் மகிழ்ச்சி இருக்கிறதே, அது அசாதாரணமான சந்தோஷம்.
நான் எவ்வளவு வேலையில் இருந்தாலும், 6 மாதத்துக்கு ஒருமுறை, பெங்களூரு சென்று என்னுடன் பணியாற்றிய டிரைவர், கன்டக்டர் போன்ற நண்பர்களைச் சந்திப்பேன். என்னுடைய சிவாஜி என்ற பெயரை நானே மறந்துவிட்டேன். அவர்கள், என்னை ’டேய் சிவாஜி’ என அழைத்துப் பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் இப்போது சந்தித்துக்கொள்வது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தித்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்" என்றார்.

