6 வயதில் 200க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ள இளம் சிறுவன் கேப்ரியோ அக்னி. சென்னையைச் சேர்ந்தவன். 2 ஆம் வகுப்பு படித்து வருகிறான். மூன்று வயது முதலே சின்ன சின்னப் பொருட்களை வரையத் தொடங்கிய போதே பெற்றோர் அவனது ஆர்வத்தை கண்டறிந்துள்ளனர். மற்ற குழந்தைகளைப் போல ரீல்ஸ் பார்ப்பதிலோ, ரைம்ஸ் பார்ப்ப்பதிலோ ஆர்வமில்லை கேப்ரியோவிற்கு. மாறாக ஓவியங்களை வரைவது எப்படி என்பது குறித்த வீடியோக்களை ஆர்வமாகப் பார்த்து சுயம்புவாக ஓவியங்களை வரைய ஆரம்பித்தான் கேப்ரியோ.
எதைப் பார்த்தாலும் அதை அப்படியே வரைந்து விட வேண்டும் என்கிற ஆர்வம் புதிய புதிய ஓவிய முறைகளை வரைவதற்கு கேப்ரியோவிற்கு உந்துதலாக மாறியுள்ளது. பென்சில் ஓவியம் வரைய ஆரம்பித்து, காந்தம் வைத்து ஓவியம் வரைவது, பெண்டுலம் வைத்து ஓவியம் வரைவது என புதியவற்றைக் கற்றுக் கொள்வதில் தீரா ஆர்வம் கொண்ட கேப்ரியோ பள்ளி அளவிலான ஓவியப் போட்டிகளில் கலந்து கொள்வது மட்டுமின்றி எங்கெல்லாம் ஓவியப் போட்டி நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று கலந்து கொள்வது வழக்கமாகி விட்டது. சமீபத்தில் வேல்ஸ் குளோபல் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து பத்தாயிரம் ரூபாய் பரிசு வென்றான் கேப்ரியோ.
புதிய முறையில் பல ஓவியங்களை வரைந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்ட இந்த குட்டி ஓவியர் இதுவரை 15 உலக சாதனைகளைப் படைத்துள்ளான். ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிசுகளையும், சான்றிதழ்களையும் வென்றுள்ளான். இந்திய உலக சாதனைப் புத்தகம், நோபல் உலக சாதனைப் புத்தகம், லண்டன் உலக சாதனைப் புத்தகம் என பல்வேறு சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளான் கேப்ரியோ அக்னி.
மூன்று நாட்கள் ஓவியம் வரையும் சாதனை முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, நாள் முழுக்க பெயிண்ட் வாசத்தில் நின்றிருந்ததால் இரண்டாம்நாள் மதியம் காய்ச்சல் வர போட்டியை விட்டு வெளியேறி விடலாம் என கேப்ரியோவின் பெற்றோர் முடிவு செய்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் மூன்றாம் நாளோ இல்லை இன்று நான் கலந்து கொள்கிறேன் என்ற தன்னம்பிக்கையோடு கலந்து கொண்டு சவாலை சாதனையாக மாற்றிய பெருமை கேப்ரியோவிற்கு உண்டு.
இந்த சாதனை ஓவியருக்கு ரோல் மாடல் என யாரும் கிடையாது. சுயமாக வரைய ஆரம்பித்த கேப்ரியோவை இப்போது தான் ஓவிய வகுப்பில் சேர்த்திருக்கின்றனர் பெற்றோர் பாலு மற்றும் ஜாஸ்மின். நடிகர் விஜயின் ரசிகரான கேப்ரியோவின் தற்போதைய லட்சியம் விஜயை த த்ரூபமாக வரைவது என்பது தான். அதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளான். கேப்ரியோவின் இத்தனை சாதனைகளுக்கும் தந்தை தாய் மட்டுமில்லாமல், தாத்தா, பாட்டி, மாமா, சித்தப்பா என ஒட்டுமொத்தக் குடும்பமே துணை நிற்கிறது.
குழந்தைகளை இளம் வயதிலேயே சாதனையாளராக மாற்றுவது ஒன்றும் பெரிய விசயமல்ல. அவர்கள் எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ அதைக் கண்டறிந்து அதைப் பயிற்றுவிப்பது மட்டும்தான் பெற்றோரின் கடமை. ஒளி அவர்களுக்குள்ளேயே இருக்கிறது. அதை அணையாமல் காத்து திரியை ஏற்றி வைப்பது மட்டுமே நமது பணி.