'2014-க்கு போய் பிரதமரை மாற்றிவிடுவேன்..' - கிஷோர் சொன்ன பதில் | Kishore
நடிகர் கிஷோர் சமீபத்திய பேட்டியில், 2014-க்கு திரும்பி பிரதமரை மாற்ற விரும்புவதாக கூறியுள்ளார். அவர், தற்போதைய வெறுப்புணர்வு ஆபத்தானது என்றும், இதை மாற்ற பல ஆண்டுகள் ஆகும் எனக் குறிப்பிட்டார். அவரது கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
கன்னட சினிமாவில் அறிமுகமாகி பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் கிஷோர். தமிழில் `பொல்லாதவன்', `ஜெயம் கொண்டான்', `வெண்ணிலா கபடி குழு', `ஆடுகளம்', `ஹரிதாஸ்', `விசாரணை', `வடசென்னை' எனப் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் `மெல்லிசை'. இப்படத்தின் புரமோஷனுக்காக பேட்டிகளை அளித்தார்.
அப்படியான பேட்டி ஒன்றில், வாழ்க்கையில் Reverse போகும் வாய்ப்பு கிடைத்தால் எதை மாற்றுவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட "2014-க்கு சென்று பிரதமரை மாற்றிவிடுவேன், இந்தியாவே மாறி இருக்கும். இன்று இருக்கும் வெறுப்புணர்வு மிக ஆபத்தானதாக இருக்கிறது. இப்படியே சென்றால் இதை மாற்ற பல ஆண்டுகள் ஆகிவிடும்.
வெறுப்பை முதலீடாக வைத்து அதிகாரத்திற்கு வருபவர்கள் மிக ஆபத்தானவர்கள். அது போன்றவர்கள் தான் இப்போது பெரும்பான்மையான இடங்களில் அதிகாரத்தில் இருக்கிறார்கள். ட்ரம்ப் துவங்கி பலரையும் அதற்கு உதாரணமாக சொல்லலாம்" என்று பதில் அளித்தார் கிஷோர். இவரின் இந்த பதில் இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு பேசுபொருளாகி வருகிறது.

