“வேட்பு மனுவையே நிரப்ப தெரியாத தமிழிசை கற்றப்பரம்பரையா?” - கருணாஸ்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை கற்றப் பரம்பரை அல்ல எனவும் தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை எனவும் எம்.எல்.ஏ கருணாஸ் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில், “தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் கனிமொழியின் வேட்பு மனுவில் படிவம்-2 சரியாக நிரப்பப்படாததால் அதுவும் ஒத்துவைக்கப்பட்டது.
இந்நிலையில் பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை வழக்கம் போல பா.ச.க. எஜமான விசுவாசத் திமிரில் எதை பேச வேண்டும் எதை பேசக் கூடாது என்ற அடிப்படை அறிவை மறந்து தனது டிவிட்டரில் “நாங்கள் கற்றப்பரம்பரை; குற்றப்பரம்பரை அல்ல” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் நோக்கம் என்ன?
குற்றம்பரம்பரை என்ற சொற்றொடரின் வரலாறு தமிழிசைக்கு தெரியுமா?
கி.பி. 1871 இல் ஆங்கிலேய இந்தியாவின் வட மேற்குப் பகுதிகளிலும் பஞ்சாப் மாகாணங்களிலும் நாடோடிக் கூட்டமாக இடம் விட்டு மாறிமாறி திருட்டு, கொள்ளை போன்ற செயல்களைப் பரம்பரையாக செய்து கொண்டிருந்த மக்களை அடக்குவதற்காக ஆங்கிலேயர்களால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுவதிலும் சுமார் 213 சாதிகளை குற்றப் பழங்குடியினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரசு இணைத்திருந்தது.
சில மாகாணங்களில் மட்டும் இருந்த இந்தச் சட்டம் 1911 இல் இந்தியா முழுமைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தக் கொடூரச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய குழுவின் பொறுப்பாளர் யார் தெரியுமா? தமிழ்நாட்டுப் பார்ப்பனர் இராமானுஜ அய்யங்கார். தமிழகத்தில் மதுரை, உசிலம்பட்டி, கீழக்குயில்குடி பகுதியில் முதன்முதலில் இச்சட்டத்தை 4.5.1914 இல் ஆங்கிலேயே காவல்துறை அறிமுகப்படுத்தியது.
1927ஆம் ஆண்டு மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமலில் இருந்துபோது அக்கால அரசியலில் கோலோச்சிய எங்கள் தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இந்தச் சட்டத்தை நீக்குவதற்காக பெரும் போராட்டம் நடத்தினார்.
முத்துராமலிங்க தேவரின் தொடர் முயற்சிகளால் 2000 கிராம முக்குலத்தோர் இந்தச் சட்டத்தின் கீழிருந்த நிலையை மாறி 341 ஆகக் குறைந்தது.
1936ல் பண்டித ஜவஹர்லால் நேரு, ‘சட்டப் புத்தகத்திலிருந்து இந்தச் சட்டம் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றார். 1947-இல் காவல்துறை அமைச்சராக இருந்த பி. சுப்பாராவ், இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தானாகவே அது காலாவதியானது.
இந்த வரலாற்றை தமிழிசை மறந்தது ஏன்? குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து அதற்காகவே போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரமறவர்களின் மண்ணில் நின்று ஓட்டுக் கேட்கும் தமிழிசை, அவர்களின் வரலாற்றை கொச்சைப்படுத்துவதின் நோக்கம் என்ன?
குற்றப்பரம்பரை என்பது அன்றைய ஆங்கிலேய அரசு குறிப்பிட்ட மக்களை முடக்குவதற்காக பயன்படுத்திய ஒடுக்குமுறை சொல்லாடல். அதை தன்னுடைய தொகுதியில் தேர்தலுக்காக, குறிப்பிட்ட சாதியினரை அவமானப்படுத்தும் விதமாக அச் சொல்லாடலை பயன்படுத்தியது ஏன்?
வேட்பு மனுவையே சரிவர நிரப்ப தெரியாத நீங்கள் கற்றப்பரம்பரையா? ஓட்டு வாங்குவதற்காகவே இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஊரெல்லாம் சுவரொட்டி வழியாக நான் நாடார் என்று அறிவிப்பு செய்வது ஏன்? தேர்தல் பயத்தில் குற்றப் பரம்பரை எனத் தேவர் சமூகத்தை சீண்டி நாடார், தேவர் சமூகத்திற்குள் கலவரம் தூண்ட முயற்சி செய்கிறீர்களா?
மிஸ்சஸ் தமிழிசை அவர்களே! நாங்கள் குற்றப்பரம்பரை என்று சொற்றொடரை சுமந்து சமூகநீதி விடியலை திறக்கப் போராடுகிறவர்கள்! ஆனால் நீங்கள் சார்ந்துள்ள பா.ச.க. ஒட்டுமொத்த சமூகத்தையே விழுங்குகிற எதேச்சதிகார ஆரிய முதலை என்பதை நீங்கள் அறிந்தீர்களோ என்னவோ நாட்டு மக்கள் அறிவார்கள்!
நாங்கள் குற்றப்பரம்பரை இல்லை! இந்தியாவைக் கொள்ளையடிக்க வந்த ஆங்கிலேயே அரசை எதிர்த்து நின்று போரிட்டு வென்ற குற்றம் சாட்டப்பட்ட பரம்பரை!
ஒன்றைமட்டும் தமிழிசை புரிந்து கொள்ளவேண்டும்! நாங்கள் குற்றப்பரம்பரை என்பது ஒருபுறம் இருக்கட்டும்! ஆனால் நீங்கள் தமிழர் உரிமைகளை மட்டுமின்றி; ஒட்டு மொத்த இந்தியாவையே அந்நியர்களுக்கு விற்றப் பரம்பரை என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.