ஜெயலலிதா நினைவிடம்: சிறந்த கட்டட வடிவமைப்பாளரை தேடுகிறது பொதுப்பணித்துறை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கான வடிவமைப்பை தயார் செய்ய சிறந்த கட்டட வடிவமைப்பாளரை பொதுப்பணித்துறை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மெரினா கடற்கடையில் எம்ஜிஆர் சமாதி அருகே, ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. எம்ஜிஆர் சமாதிக்குப் பின்புறம் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக 15 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கட்டுமானப் பணிக்கான வடிவமைப்பு கேட்கப்பட்டதாகவும், அதற்கு 10க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் பொதுப்பணித்துறை, அண்ணா பல்கலைக்கழக வடிவமைப்பு கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கொண்ட குழு, ஜெயலலிதா மணிமண்டப வடிவமைப்பை இறுதி செய்யவுள்ளதாக தெரிகிறது. தேர்வு செய்யப்படும் வடிவமைப்பாளர், கடலோரப் பகுதிக்கான கட்டுமான விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில் தனது வடிவமைப்பைத் தர கேட்டுக் கொள்ளப்படுவார் எனக் கூறப்படுகிறது. அதன்பிறகு, 6 மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு ஓராண்டில் மணிமண்டபம் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.