போயஸ் கார்டனில் ஐடி ரெய்டு: லேப்டாப், பென் டிரைவ் பறிமுதல்
ஜெயலலிதாவின் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் லேப்டாப், 2 பென் டிரைவ் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்.
சசிகலாவின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்களுக்குச் சொந்தமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் இருக்கும் இடங்களில் கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் நீட்சியாக நேற்றைய தினம் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
வருமான வரித்துறையினரின் சோதனையை அறிந்த இளவரசியின் மகனும் ஜெயா டிவியின் சிஇஓ-வுமான விவேக் ஜெயராமன், இரவு 10 மணியளவில் தனது மனைவியுடன் போயஸ்கார்டன் சென்றார். அங்கு வேதா இல்லத்திற்குள் செல்வதற்கு விவேக்கிற்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. விவேக்கை உடன் வைத்துக்கொண்டு வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனை நள்ளிரவைக் கடந்து 1.45 மணி வரை நீடித்தது. சோதனையைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவேக் ஜெயராமன், ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து லேப்டாப், 2 பென்டிரைவ் ஆகியவற்றை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றிருப்பதாக தெரிவித்தார். அதேபோல், ஜெயலலிதாவிற்கு வந்த கடிதங்களையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக கூறினார்.