சந்திரயான் 3 வெற்றிப் பயணத்தை சாதித்து காட்டிய தமிழ்நாட்டு விஞ்ஞானி வீரமுத்துவேல்! யார் இவர்?

2016-ஆம் ஆண்டில், விண்கலத்தின் மின்னணுத் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து வீரமுத்துவேல் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை, பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதிக்கப்பட்டது.
வீர முத்துவேல்
வீர முத்துவேல்PT

நிலவில் சந்திரயான்-3ன் லேண்டர் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட பின்னணியில் ஒரு தமிழரின் உழைப்பை உலகமே வியந்து பாராட்டி வருகிறது. இவரின் இந்த உழைப்பு இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது மட்டுமல்லாமல், நிலவில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது இந்தியா. யார் இந்த தமிழர் இவரின் உழைப்பு தான் என்ன?

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பழனிவேலுவின் மகன்தான் வீரமுத்துவேல். இவருக்கு விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்ற தாகம் சிறு வயதிலேயே இருந்தது. தொழிற்கல்வி முடித்துவிட்டு, தாம்பரத்தில் தனியார் கல்லூரியிலும், சென்னை ஐஐடியிலும் தொழிற்கல்வி, பொறியியல், முதுநிலை ஆராய்ச்சி என அடுத்தடுத்து தேடித்தேடி படித்தார் வீரமுத்துவேல்.

சென்னை ஐஐடியின் ஏரோ-ஸ்பேஸ் துறையில் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இவருக்கு, 1989-ஆம் ஆண்டில் இஸ்ரோவின் விஞ்ஞானியாகும் வாய்ப்பு கிடைத்தது. டிப்ளமோ படிப்பிலிருந்து கற்றதால் நுணுக்கமான சில வன்பொருள் வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யும் இயல்பு, வீரமுத்து வேலுக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்தது.

2016-ஆம் ஆண்டில், விண்கலத்தின் மின்னணுத் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து வீரமுத்துவேல் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை, பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதிக்கப்பட்டது.

சந்திரயான்3 திட்டமிடலுக்கு வந்ததெப்படி?

அப்போது அந்தத் தொழில்நுட்பம், இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டது. ஏனெனில், நிலவில் லேண்டரை தரை இறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும் என நினைத்தார்கள்.

சந்திரயான் 2 விண்கலம் நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்யாதது இஸ்ரோவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இத்திட்டத்தில் இயக்குனராக இருந்த வனிதா மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு, மூத்த விஞ்ஞானிகளின் பாராட்டுகளைப் பெற்ற வீரமுத்து வேலலை சந்திரயான்-3 திட்டத்திற்கு திட்ட இயக்குநராகவும் மாற்றினர்.

விஞ்ஞானி வீரமுத்து வேலுக்கு கீழே 29 துணை இயக்குநர்களும், அவர்களுக்குக் கீழே எண்ணற்ற விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் இணைந்து உருவாக்கியதுதான் சந்திரயான்-3 திட்டம். சந்திரயான் - 2க்கு செய்யப்பட்டதை காட்டிலும் கூடுதலான சோதனைகளுக்கு சந்திரயான் - 3 உட்படுத்தப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையான ஆய்வுகள், பரிசோதனைகளுக்குப் பிறகு சந்திரயான் விண்கலம் முழு வடிவத்தை அடைந்துள்ளது.

சந்திரயான்3 வெற்றிக்கு வாழ்த்துச் சொன்ன வீரமுத்துவேல்

மெய்நிகர் தொழில்நுட்பம், மென்பொருள் - வன்பொருள் குறித்தான அனைத்துத் துறைகளிலும் ஈடுபாடுகொண்ட வீரமுத்துவேல், கடந்த இரண்டு ஆண்டு காலத்தை ஆய்வகத்திலேயே செலவிட்டுள்ளார். ஏற்கெனவே சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய திட்டங்களிலும் தமிழர்களே திட்ட இயக்குநராக இருந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சந்திரயான்-3 திட்டத்திலும் இந்தியாவின் நிலவுப்பயண வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் வீரமுத்துவேல் என்ற தமிழர்.

இவரது முயற்சியால் வெற்றிபெற்ற சந்திரயான்3 திட்டத்திற்கு இவருடன் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார் ”இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய, வழி நடத்திய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com