\
நெல்லை: பாஜக நிர்வாகி மீது துப்பாக்கிச் சூடு

நெல்லை: பாஜக நிர்வாகி மீது துப்பாக்கிச் சூடு

நெல்லை: பாஜக நிர்வாகி மீது துப்பாக்கிச் சூடு
Published on

நெல்லை பெருமாள்புரத்தில் முன்பகை காரணமாக பாஜகவின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பெரியதுரை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டில் வசிக்கும் முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.


நெல்லை மாநகர் பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பெரியதுரை (32). இவர் அப்பகுதியில் பரோட்டா கடை நடத்தி வருகிறார், இவருக்கும் கடை அருகில் வசிக்கும் முன்னாள் இராணுவ வீரருக்கும் இடையே இடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. கடை கழிவுகள் கொட்டுவதில் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போதெல்லாம் துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவதாக முன்னாள் ராணுவ வீரர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் இன்று காலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றவே முன்னாள் இராணுவ வீரர் ஜெபமணி தனது துப்பாக்கியை கொண்டு பெரியதுரையை நோக்கி சுட்டுள்ளார். இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முன்னாள் இராணுவ வீரர் ஜெபமணியை கைது செய்ததோடு அவரது துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் பெருமாள்புரம் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com