Since 1885.. சென்னையின் பழமை வாய்ந்த பேக்கரி பற்றி தெரியுமா?
வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரத்தின் பெருமையை பற்றியும், அதன் சிறப்புகளை பற்றியும் அறியாதோர் இருக்கவே முடியாது. சென்னை என்றதுமே பீச், பிரிட்டிஷ் காலத்து கட்டடங்கள், சென்னையின் சாலைகள் தொடங்கி தற்போதைய வணிக வளாகங்கள் வரை பல அம்சங்கள் நினைவுக்கு வரும்.
இப்படி மதராசப்பட்டினமாக இருந்து சென்னையாக மாறி ஆசியாவின் மிகப்பெரிய மாநகரங்களில் ஒன்றாக இருக்கும் இதே சிட்டியில்தான் கிட்டத்தட்ட 136 வருஷமா ஒரு பேக்கரி இயங்கிட்டு வருதுனு சொன்னால் அது மிகையாக இருக்காது.
வரலாற்று சிற்பங்களுக்கு பெயர் பெற்ற மாமல்லபுரத்துல இருந்து அக்மார்க் சென்னை நகரின் மத்திய பகுதியில் இயங்கிட்டு வருது Smith Field Bakery. 1885ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பேக்கரி 4 தலைமுறைகளாக எந்த இடையூறும் இல்லாமல் மக்களின் ஆதரவோடு நடத்தப்பட்டு வருகிறது.
மாமல்லபுரத்தில் உள்ள சதராசப்பட்டினத்தில் பொன்னுசாமி நாயக்கர் என்பவரால் 1885ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஸ்மித் ஃபீல்டு பேக்கரி பின்னர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
அந்த பகுதியில் எத்தனை பேக்கரிகள் வந்தாலும் ஸ்மித் ஃபீல்ட் பேக்கரியில் விற்கப்படும் ஹோம் மேட் பிஸ்கட்ஸ், ரொட்டிகளுக்கு இணையாக எதுவும் இருக்க முடியாது என தங்களுடைய நாஸ்டால்ஜிக் நினைவுகளை கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
சுதந்திரத்துக்கு முன்பும் சரி அதன் பிறகும் சரி ஸ்மித் ஃபீல்டு பேக்கரியில் தயாரிக்கப்படும் ரொட்டிகளுக்கு மத்திய சென்னை மக்களிடையே ரொம்பவே பிரசித்தமாகவே இருந்திருக்கிறது.
ஸ்வீட் பட்டர் பிஸ்கட், ஏலக்காய், சாக்கோ, ராகி, கம்பு, லவங்க பட்டை என 20க்கும் மேலான ஃப்ளேவர்களில் தினந்தோறும் பிஸ்கட் தயாரித்து ஜாடிகளில் வைத்து விற்று வருகிறார்கள்.
ஆங்கிலோ இந்தியன் உட்பட பலதரப்பு மக்களால் ஸ்மீத் ஃபீல்டு பேக்கரியின் ரொட்டிகள் போன்ற தயாரிப்புகள் விருப்பமான தேர்வாக இருந்திருக்கிறது. ஆனால், ஒரு நாளைக்கு 500 பன்களெல்லாம் முன்பு தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் கால மாற்றம் காரணமாக தற்போது 150 பன்களையே தயாரிக்கிறார்களாம்.
இருப்பினும் ஒரு கட்டத்திற்கு மேல் மக்கள் மீண்டும் பழமையை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சுழற்சி எங்கள் பக்கமும் திரும்பும் என்பதில் எந்த ஐயப்படும் இல்லை என நான்காவது தலைமுறையாக ஸ்மித் ஃபீல்டு பேக்கரியை நடத்திவரும் வெங்கடேஷ் சங்கர் கூறியுள்ளார்.
மேலும் இப்போது எங்களுக்கு பெருமளவில் வருமானம் வராவிட்டாலும் எங்கள் பேக்கரியின் தரத்தில் எப்போதுமே சமரசமாக இருந்ததில்லை. இதே தரத்தோடு அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என திட்டமிட்டிருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எத்தனையோ அடுமணைகள் வந்தாலும் சென்னையின் பாரம்பரியங்களில் ஒன்றாக இருக்கும் ஸ்மித் ஃபீல்டு பேக்கரியின் பெருமை குறைந்துவிடாது என்பது தங்கள் கடையை தேடி வந்து பன், பிஸ்கட்களை வாங்குவதை தவறாது கடைப்பிடித்து வருவதன் மூலம் அறியலாம் என வெங்கடேஷ் பெருமை பொங்க கூறியிருக்கிறார்.
உலகப் போர்கள், சுதந்திர போராட்டங்கள், பல அரசியல் மற்றும் ஆட்சி மாற்றங்களை கண்ட பழமை வாய்ந்த பெருமையாக ஸ்மித் ஃபீல்டு பேக்கரி இருக்கிறது. இது மீண்டும் முன்பிருந்ததை போன்று அமோகமான விற்பனையை மேற்கொள்ள வேண்டும் என்பதே 80s மற்றும் 90களுக்கு முந்தைய காலங்களில் வளர்ந்தவர்களின் விருப்பமாக இருப்பது கூகுள், யூடியூப் போன்ற சமூக தளங்களில் குறிப்பிடுவதன் மூலம் அறியப்படுகிறது.