தேர்தல் ஆணையத்திற்கு எதிராக திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவிட்ட நேரத்திற்குள் தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடவில்லை என்று கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக சார்பாக ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை இன்று தாக்கல் செய்தார். செப்டம்பர் 18-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மேற்கொண்டு 14 நாட்கள் கடந்துவிட்டதாக தமது மனுவில் திமுக குறிப்பிட்டுள்ளது. இந்த மனு அடுத்த 3 அல்லது 4 நாட்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளால் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக செப்டம்பர் 4-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் விரிவான உத்தரவை அளித்தது. அதில், தமிழக உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்கு முன்னதாக நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

