இந்தியாவில் மிகவும் பாரம்பரியக் கட்சியாக இருக்கும் அகில இந்திய காங்கிரஸ், பல்வேறு தலைவர்களால் வழி நடத்தப்பட்டிருந்தாலும் அவை நேரு குடும்பத்தினரின் கட்சியாகவே தற்போது அறியப்படுகிறது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை தற்போது தேர்வு செய்வதற்கான நடவடிக்கையும் இதனை உறுதிப்படுத்துகிறது.
சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய கட்சிகளுள் ஒன்றான காங்கிரஸ், தற்போது சோனியா காந்தியின் தலைமையில் வழிநடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தவிர்க்க முடியாத முக்கிய அரசியல்வாதியான ஜவஹர்லால் நேரு, சுதந்திரத்திற்கு முன்னர் 1929, 1930, 1936, 1937 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். பின்னர், 1951 முதல் 1954 வரை மீண்டும் காங்கிரஸை வழிநடத்தினார். அதனையடுத்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு நேருவின் மகள் இந்திரா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். இந்தியாவின் இரும்புப் பெண்மணியாக கருதப்படும் இந்திரா காந்தியின் தலைமையில், 1959ம் ஆண்டும் 1978 முதல்1984 வரையிலும் காங்கிரஸ் வழிநடத்தப்பட்டது. அதன் பின்னர் இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி 1985 முதல் 1991 வரை காங்கிரஸ் தலைவராக பதவி வகித்துள்ளார். ராஜீவ் காந்திக்குப் பிறகு 6 ஆண்டுகள் பி.வி. நரசிம்மராவ் மற்றும் சீதாராம் கேசரி ஆகியோரால் காங்கிரஸ் வழிநடத்தப்பட்டாலும் மீண்டும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தியின் மனைவியான சோனியா காந்தியிடம் காங்கிரஸ் கட்சி வந்தது. 1998ம் ஆண்டு காங்கிரஸுக்கு தலைமை ஏற்ற சோனியா காந்தி, தற்போது வரை அதன் தலைவராக நீடித்து வருகிறார். தற்போது சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.