“ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே, ஜகத் குரு” - ஹேம மாலினியின் தனி வழி
பாலிவுட் நடிகையும் மதுரா தொகுதி பாஜக எம்.பியுமான ஹேமமாலினி நாடாளுமன்றத்தில் எம்.பி ஆக பதவி ஏற்றுக் கொண்டார்.
பாஜக இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேற்று பதவிப் பிரமாணம் ஏற்றனர்.
அதனையடுத்து, இரண்டாவது நாளாக எம்.பிக்கள் பதவி பிரமாணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழக எம்.பிக்கள் இன்று பதவியேற்றினர். பதவியேற்கும் போது அவர்கள் தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என முழக்கமிட்டனர். காமராஜர் வாழ்க, ஜனநாயகம் வாழ்க, அம்பேத்கர் வாழ்க, மார்க்சியம் வாழ்க, இந்தியா வாழ்க, கலைஞர் வாழ்க என்று தமிழக எம்.பிக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக முழக்கமிட்டனர். தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் ‘எம்.ஜி.ஆர் வாழ்க, ஜெயலலிதா வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்’ என முழக்கமிட்டார்.
இந்நிலையில், மதுரா தொகுதி பாஜக எம்.பி ஹேமமாலினி நாடாளுமன்றத்தில் எம்.பியாக பதவியேற்கும் போது, “ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே, ஜகத் குரு” என்று முழங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ரேபரேலி தொகுதி எம்.பியுமான சோனியா காந்தி, பாஜக மத்திய முன்னாள் அமைச்சர் மேனகா காந்தி இருவரும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
உன்னாவ் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி சாக்ஷி மகாராஜ் சமஸ்கிருதத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
சமாஜ்வாடி கட்சி எம்.பி ஷபிகுர் ரஹ்மான் பர்க் பதவியேற்ற பின் ‘வந்தே மாதரம் என்பது இஸ்லாமிற்கு எதிரானது’ என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தே மாதரம் என முழக்கங்கள் எழுப்பப்பட்டது.