“சந்திரயான் 2 வெற்றிக்காக உலகமே காத்துக் கொண்டிருந்தது”- இஸ்ரோ தலைவர்
இஸ்ரோ மட்டுமல்ல.. இந்தியா மட்டுமல்ல.. உலகமே சந்திரயான் 2 வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்தது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. orbiter, lander மற்றும் rover என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இதனையடுத்து சரியாக 16 நிமிடத்தில் சந்திரயான்-2 விண்கலம், பூமியின் வட்டப் பாதையை சென்றடைந்தது. இதனையடுத்து விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின் பேசிய சிவன், “ சந்திரயான் 2 விண்கலம் புவிவட்டப்பாதையில் சென்றடைந்தது வரலாற்றில் முக்கியமான நாள். இஸ்ரோ மட்டுமல்ல.. இந்தியா மட்டுமல்ல.. உலகமே சந்திரயான் 2 வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்தது. 15 முக்கியமான பணிகளுக்கு அடுத்து, சந்திரயான் 2 விண்கலத்தை தென் துருவத்தில் இறங்குவதற்கான பணிகளை செய்வோம். வெற்றியை சாதமாக்கிய அனைவரையும் வணங்குகிறேன். இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பினால்தான் இது சாத்தியமானது. சந்திரயான் 2 திட்டத்திற்காக பொறியாளர்கள், விஞ்ஞானிகள் சுயநலமின்றி பணியாற்றினர்” எனத் தெரிவித்தார்.