இந்திய அரசின் நிபந்தனைகள் ஏற்பு.. விரைவில் களம்காணும் எலான் மஸ்க் நிறுவனம்!
உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க்கின் ஸ்டாா்லிங்க், அமேசான் நிறுவனத்தின் குப்பியா், பாரதி குழுமத்தின் ஒன்வெப் யூடெல்சாட் மற்றும் எஸ்இஎஸ்-ஜியோ இணைந்து நடத்தும் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் செயற்கைக்கோள்கள் மூலம் தொலைத்தொடா்பு சேவைகள் வழங்க ஆா்வம்காட்டி வருகின்றன. மறுபுறம், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) செயற்கைக்கோள் சேவைகளுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் விலைக் கட்டமைப்பை இறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2025ஆம் ஆண்டின் இறுதியில் செயற்கைக்கோள் இணைய சேவைகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவைகளைத் தொடங்க அரசின் உரிமத்தைப் பெறுவதற்கு இந்திய அரசு விதித்த முக்கிய நிபந்தனைகளை எலான் மஸ்க்கின் Starlink நிறுவனம் முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது. பயனர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்கவும் தேசிய பாதுகாப்புகளுக்கு தேவைப்படும்போது புலனாய்வு அமைப்புகளுக்கு Starlink-ன் அணுகலை வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம் மஸ்கின் நிறுவனம் இந்தியாவுக்குள் நுழைய இருப்பது ஏறத்தாழ உறுதியாகி இருக்கிறது.
இருப்பினும், ஸ்டார்லிங்க் சில நிபந்தனைகளில் தளர்வுகளைக் கோரியுள்ளது. அவை, அங்கீகரிக்கப்பட்டால் படிப்படியாக சேவைகள் தொடரும் எனக் கூறப்படுகிறது. தற்போதுவரை Starlink-ன் விண்ணப்பம் உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளால் பரிசீலனையில் உள்ளது. ஸ்டார்லிங்கின் முக்கிய தேவைகளுக்கு இணங்கினாலும், இந்திய அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டை கடைபிடித்துள்ளது. ஸ்டார்லிங்க் மற்றும் அமேசானின் கைபர் போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளிக்காது என்பதை தெளிவுபடுத்துகிறது.
முன்னதாக, இந்தியாவில் அலைக்கற்றை ஏலம் இனி நடக்காது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருந்தார். இதையடுத்து, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அலைக்கற்றை வாங்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன் காரணமாகவே எலான் மஸ்க் நிறுவனமும் உள்ளே நுழைந்துள்ளது. இதனால், இந்தியாவை சேர்ந்த ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரிய பின்னடைவது ஏற்பட்டு உள்ளது.