வீடியோ கேமில் ராஜமௌலி... செமயா இருக்கேடா இது..!
மிகவும் பிரபலமான DEATH STRANDING வீடியோ கேமின் சீக்குவல் வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் தெலுங்கு சூப்பர் இயக்குநர் ராஜமௌலியும் , அவர் மகன் கார்த்திகேயாவும் கேம் கதாபாத்திரங்களாக வருகிறார்கள் என்கிற செய்திதான் சோஷியல் மீடியாவின் ஹாட் டாப்பிக். அப்படி இந்த கேமில் என்ன ஸ்பெஷல். வாருங்கள் பார்க்கலாம்.
Stranding வகை வீடியோகேம்களில் இதுதான் முதல் முயற்சி என்கிறார் ஜப்பானிய வீடியோ கேம் டிசைனரான ஹிடியோ கொஜிமா. DEATH STRANDING விளையாட்டு சிதைந்துபோன அமெரிக்காவை உலகாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு ‘டெத் ஸ்ட்ராண்டிங்’ என்று அழைக்கப்படும் ஒரு பேரழிவு நிகழ்வு ‘பீச்ட் திங்ஸ்’ என்ற அமானுஷ்யங்களை உருவாக்கிவிடும். இந்த ‘பீச்’ என்பது ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமான நிலங்களாக கருதப்படுகிறது. அவை பொதுவாக மரணத்திற்கு அருகில் உள்ள அனுபவங்களின் போதும், மரணத்தைக் கடந்து after life நிகழ்வுகளின் போது மட்டுமே நம்மால் கனெக்ட் செய்ய முடியும். மேலும் அவை ஒரு உயிருள்ள மனிதனை விழுங்கும்போது, அணுகுண்டு அளவிலான வெடிப்பை உருவாக்குகின்றன. இது ‘வாய்டவுட்’ என்று அழைக்கப்படுகிறது. அவை ‘டைம்ஃபால்’ என்று அழைக்கப்படும் மழையை உருவாக்குகின்றன. இது தாக்கும் எதையும் வேகமாக வயதாக்கி சிதைக்கிறது. இப்படி சிதைந்து போன காலனிகள் பிரிட்ஜஸ் என்று அழைக்கப்படும் ஒரு நிறுவனத்தின் சேவைகளை நம்பியுள்ளன, அதன் போர்ட்டர்கள் பிடிகள், கொள்ளைக்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகளை எதிர்த்து நகரங்களுக்கு பொருட்களை வழங்க வேண்டும்.
இப்படியாக செல்லும் வீடியோ கேமில் எண்ணற்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். வீடியோ கேமின் நாயகன் சாம் போர்ட்டர் பிரிட்ஜஸாக அமெரிக்க நடிகர் நார்மன் ரீடஸ் வருகிறார். அவருக்கு உதவும் நபராக பிரெஞ்சு நடிகை லீ சீடக்ஸ் வருகிறார். டென்மார்க்கின் பிரபல நடிகர் மேட்ஸ் மிக்கல்சனும் இந்த கேமில் இருக்கிறார். இதன் இரண்டாவது பாகமான Death Stranding 2: On the Beach கேமில் தான் ராஜமௌலியும், அவரின் மகன் கார்த்திகேயாவும் வருகிறார்கள்.
RRR படத்தின் ஜப்பானிய ரிலீஸின் போதே ஹிடியோ கொஜிமோவை சந்தித்திருக்கிறார்கள். தன்னுடைய படங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், கார்ட்டூன், வீடியோ கேம்களில் இருந்து இன்ஸ்பையராகி உருவாக்கிய காட்சிகளை எல்லாம் திரைக்கதையாக மாற்றியிருப்பார் ராஜமௌலி. இப்போது அவரே ஒரு வீடியோ கேம் கதாபாத்திரமாக வந்து அசத்தியிருக்கிறார்.