காஸா
காஸா முகநூல்

'திங்குற ரொட்டித் துண்டுல ரத்தச் சுவை தான்' நிவாரண முகாம்களில் கொல்லப்படும் காஸா மக்களின் அழுகுரல்!

நேற்று நிவாரண முகாம்களில் உணவுக்காகவும், உடைக்காகவும் நிர்கதியாய் நின்றுகொண்டிருந்த 56 மக்களை சுட்டு வீழ்த்தியிருக்கிறது இஸ்ரேல் ராணுவம்.
Published on

உண்ணும் போது யாரேனும் சாப்பாடு வேண்டுமென கேட்டாலே நமக்கெல்லாம் மனம் ஒரு மாதிரி ஆகிவிடும். நாயோ, பூனையோ கத்தினால் கூட அதற்கு சிறு பகுதி வைத்துவிட்டுத்தான் சாப்பிடுவோம். ஆனால், காஸாவில் உணவுக்காக நின்றுகொண்டிருந்த மக்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்தியிருக்கிறது. நேற்று நிவாரண முகாம்களில் உணவுக்காகவும், உடைக்காகவும் நிர்கதியாய் நின்றுகொண்டிருந்த 56 மக்களை சுட்டு வீழ்த்தியிருக்கிறது இஸ்ரேல் ராணுவம்.

ரஃபா பகுதியில் மட்டும் 27 நபர்கள் துப்பாக்கி முனையில் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். உணவு முகாம்களில் இல்லாமல், வேறு இடங்களில் கொல்லப்படுபவர்களின் பட்டியல் தனி. இது முதல்முறை அல்ல என்பதுதான் இதனினும் மோசமான செய்தி.

இப்படியாக காஸாவின் மனிதநேய அமைப்பின் நிவாரண மையங்களில் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நானூற்றைக் கடந்திருக்கிறது. நாள்தோறும் பசி பட்டினியால் மரணித்துக்கொண்டிருப்பவர்களுக்கு எளிதாக மரணத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது இஸ்ரேல் அரசு.

ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்துக்கு முன், ஜனம் கடல் அலை போல் நிவாரண முகாம் நோக்கி ஓடி வருகிறார்கள். அவர்களிடம் எந்த ஆயுதமும் இருப்பதில்லை. பசியால் வயிற்றைப் பிடித்துக்கொண்டு நிர்கதியாய் எந்த பாதுகாப்பும் இன்றி நிவாரணம் முகாம் நோக்கி வருகிறார்கள். அவர்களின் மிகப்பெரிய ஆசை எல்லாம் கைப்பிடி சோறு தான். ஆம், யாரும் அங்கு சேமித்து வைப்பதெற்கெல்லாம் செல்லவில்லை. பல நாட்களாக சாப்பிடாமல் இருப்பவர்களே , இனியும் பொறுக்க முடியாது என முகாம் நோக்கி வருகிறார்கள். நிவாரண முகாம்களையும் மரண படுக்கைகளை மாற்றிக்கொண்டிருக்கிறது இஸ்ரேல். " ஒரு வாய் சோத்துக்குதான் இங்க வர்றோம். இது ரொம்ப மோசமான உலகம். நீதி , நேர்மைன்னு எதுவும் இல்லாத உலகம். மொத்த உலகமும் எங்க கைவிட்டுடுச்சு. டஜன் கணக்குல எங்கள கொன்னுக்கிட்டு இருக்காங்க. ஒரு ரொட்டித்துண்டுக்கு உசுரக்கொடுத்துட்டு இருக்கோம். " என விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார் வரிசையில் காத்திருக்கும் முன்சிர் செய்ஃப்.

இந்த இடத்தில் தான் நிவாரணப் பொருட்கள் தரப்படுகிறது என்கிற செய்தி கசிய விடப்படுகிறது. நிவாரணப் பொருட்கள் வாங்கச்செல்லும் பலர், வீடுகளுக்கு திரும்புவதே இல்லை . தன்னுடைய சகோதரர்களுக்காக உணவு வாங்கச் சென்ற அப்தல்லாஹ் அல் நஜார், அங்கு நடக்கும் கலவரங்கள் குறித்துப் பேசுயிருக்கிறார். கைகளில் கட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அப்தல்லாஹ் சொல்வது எல்லாம் ஒன்று தான். இந்த உணவில் ரத்தச்சுவை உண்டு என்கிறார். சர்வதேச ஊடகமான அசோசியேட்டட் பிரெஸ் தளத்துக்கு அங்கிருந்தவர்களில் சிலர் பேசியிருக்கிறார்கள். அது இன்னும் கனம் நிறைந்தது.

காஸா
மாயமான 400 கிலோ யுரேனியம்.. ஈரான் செய்தது என்ன? அமெரிக்க உளவுத் துறைக்கு கிடைத்த புதிய தகவல்!

ஆம், நிவாரண டிரக்குகளை நோக்கிச் செல்பவர்கள் தான் இஸ்ரேலின் முதல் டார்கெட். டிரக் நோக்கிச் செல்பவர்களைத்தான் முதலில் சுட்டு வீழ்த்துகிறார்கள். முதலில் செல்பவரை சுட்டுவிட்டாலே, அடுத்த அடி முன்னகர கால்கள் மறுக்கும் அல்லவா. அப்படியான மோசமான நடைமுறையைத்தான் காஸாவில் பின்பற்றுகிறது இஸ்ரேல் ராணுவம்.

ராணுவம் நோக்கி வந்ததால் சுட்டோம் என தரப்பு நியாயமாய் ஒன்றைச் சொல்கிறது இஸ்ரேல்.

போர்ச் சூழலில் எந்த தேசத்திடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் இருக்கின்றன என கிரிக்கெட் கார்டு விளையாட்டு போல் பார்ப்பது எல்லாம் ஜாலியாகத்தான் இருக்கும். ஆனால், உண்ண உணவின்றி , அடுத்த நொடி நிச்சயமற்ற சூழல் உருவாகும் போதுதான் போர் எவ்வளவு ஆபத்தான உயிரினம் என்பது புரியும். போர் அழிவை உண்டு வாழும். காஸா மக்கள் நிம்மதியாய் உணவு உண்ணும் நாளுக்காக காத்திருப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com