விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட்.. இந்தியாவின் அடுத்தக்கட்ட திட்டங்கள் என்ன?
2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் SPACE DOCKING பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காகத்தான் பிஎஸ்எல்வி-C60 ராக்கெட்டின் பயணத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
இந்த முயற்சி இந்தியாவின் ககன்யான் திட்டம் மற்றும் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு முக்கியமான அடிப்படையாக அமையும் என கூறப்படுகிறது. SPADEX (Space Docking Experiment) திட்டத்தின் கீழ், இரு தனித்தனி விண்கலங்களை விண்வெளியில் இணைக்கும் "டாக்கிங்" எனப்படும் தொழில்நுட்பத்தை சோதிக்கிறது.
இது வெற்றிகரமாக முடிந்தால், இந்தியா இந்த சாதனையை அடையும் நான்காவது நாடாகக் கருதப்படும்.
பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்டின் பணி என்ன?
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இரவு 10 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய 2ஆவது தளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
PSLV-C60 ராக்கெட் மூலம் 220 கிலோ எடை கொண்ட SDX-1 மற்றும் SDX-2 எனப்படும் இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் உட்பட, மொத்தம் 24 உப செயற்கைக்கோள்கள் 470 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்படும்.
முழுக்க இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியில் உருவாக்கப்படும் இந்தத் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் சர்வதேச விண்வெளி துறையில் இந்தியாவின் வலிமை மேலும் அதிகரிக்கும் என்றே நம்பலாம்.