நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் 3; புதிய மைல்கல்லை எட்டிய இஸ்ரோ
சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14ம் தேதி LVM ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடத்தில் புவியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, பூமியைச்சுற்றி நீள்வட்ட பாதையில் பயணித்த விண்கலம், சில நாட்கள் இடைவெளியில் ஒவ்வொரு சுற்றாக விரிவு செய்யப்பட்டு வந்தது.

அடுத்தடுத்து பூமியின் 5 சுற்று நீள்வட்ட பாதையை முடித்துக்கொண்ட சந்திரயான் விண்கலம் ஆக.1-ம் தேதி புவிவட்ட பாதையிலிருந்து விலகி சந்திரனை நோக்கி நொடிக்கு 10.5 கி.மீ வேகத்தில் நகர ஆரம்பித்தது.
இந்நிலையில் இன்று நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சந்திரயான் 3 சென்றுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இரவு 7.15 மணியளவில் நிலவின் நீள்வட்ட சுற்றுக்குள் தன்னை இணைத்துக்கொண்டது சந்திரயான் 3. அடுத்த 20 நாட்கள் சந்திரயான் நிலவை அதன் நீள்வட்ட சுற்றில் சுற்றிய பின் அது ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரை இறங்கும்.