சூரியன் போன்று 5 லட்சம் விண்மீன்கள்; ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பில் பதிவான பால்வெளி அண்டத்தின் அதிசயங்கள்

இரவு வானத்தில் தெரியும் கொஞ்ச நட்சத்திரங்களைக் கண்டே பிரமித்துப்போகிறவர்கள் மேலும் அசந்துபோகும் அளவுக்கு ஐந்து லட்சத்துக்கும் அதிக நட்சத்திரக் கூட்டத்தை பதிவு செய்திருக்கிறது ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்.
5 லட்சம் நட்சத்திரங்கள்
5 லட்சம் நட்சத்திரங்கள்ட்விட்டர்

பிரபஞ்ச ரகசியத்தை கண்டறிவதற்காக 2021ஆம் ஆண்டு நாசாவால் அனுப்பப்பட்ட ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப், சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள விடைதெரியாத பல கேள்விகளுக்கான பதிலை புகைப்படங்கள் மூலமாக தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. தற்போது, சூரியக் குடும்பம் இருக்கும் பால்வெளி அண்டத்தின் மையப் பகுதியை ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப் புகைப்படமாக எடுத்துள்ளது.

பால்வெளி அண்டத்தில் அணுக்கரு பகுதி எனக் கூறப்படும் சேகடேரியஸ் - சி எனும் நட்சத்திரக் கூட்டத்தை குவியப்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சூரியன் போன்று 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்மீன்கள் பதிவாகியுள்ளன. பூமியில் இருந்து 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் பால்வெளி அண்டத்தின் மையப் பகுதியில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் இருக்கும் அகச்சிவப்பு கேமராக்கள் மூலம் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே கருமேகங்களும், நட்சத்திரங்கள் உருவாவதற்கு காரணமான ஹைட்ரஜன் வாயுக்களும் வெளிப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மிக அழுத்தமான வாயுக்களும், தூசுக்களும் நிறைந்த பகுதியில் ஆயிரக்கணக்கான விண்மீன்கள் பொதிந்துள்ளதாக நாசா கூறியுள்ளது. இவை சூரியனைப் போன்று 30 மடங்கு அதிக நிறைகொண்ட விண்மீன்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த விண்மீன் கூட்டத்திற்கு இடையில் அண்டத்தின் மையப் பகுதியில் இருக்கும் மிகப்பெரிய கருந்துளையும் புதைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்தும் இதுகுறித்தான ஆச்சரியகரமான தகவல்களை வெளியிட்டும் வருகின்றனர்.

- ந.பால வெற்றிவேல்

இதையும் படிக்க: 16 பந்துகளில் 20 ரன் தேவை; ஆனாலும் தோனி செய்த மேஜிக்! வைரலாகும் Champions Trophy வின்னிங் மொமண்ட்ஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com